கொரோனா தடுப்பு நடவடிக்கை: கூடுதலாக 4 சோதனை சாவடிகள் அமைக்கப்படும - கலெக்டர் மெகராஜ் பேட்டி


கொரோனா தடுப்பு நடவடிக்கை: கூடுதலாக 4 சோதனை சாவடிகள் அமைக்கப்படும - கலெக்டர் மெகராஜ் பேட்டி
x
தினத்தந்தி 18 Jun 2020 7:18 AM GMT (Updated: 18 Jun 2020 7:18 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதலாக 4 சோதனை சாவடிகள் அமைக்கப்பட இருப்பதாக கலெக்டர் மெகராஜ் கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டு உள்ள சோதனைசாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு அருளரசு முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் தற்போது செயல்பட்டு வரும் 14 சோதனைசாவடிகளுடன் கூடுதலாக 4 சோதனைசாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், தற்போது செயல்பட்டு வரும் 3 சோதனைசாவடிகளை சில 100 மீட்டர்கள் தூரம் மாற்றி அமைப்பதன் மூலம் இ-பாஸ் அனுமதி இல்லாமல் வருபவர்களை கண்டறிய முடியும் என முடிவெடுக்கப்பட்டது.

பின்னர் மாவட்ட கலெக்டர் மெகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் 14 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி ஊர்களில் இருந்து வரும் நபர்கள் அந்த சோதனைசாவடிகள் வழியாகவே வரமுடியும். தற்போது இ-பாஸ் அனுமதி வழங்குதல் மிக கடுமையாக்கப்பட்டு உள்ளது. அதன் காரணமாக ஒரு சிலர் இ-பாஸ் அனுமதி பெறாமல் சிறிய சாலைகள் வழியாகவோ, பிற பகுதிகள் வழியாகவோ இருசக்கர வாகனங்கள் மூலம் மாவட்டத்திற்குள் வந்து விடுகின்றனர்.

இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கூடுதலாக சோதனைசாவடிகள் அமைக்க உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி கூடுதலாக 4 சோதனைசாவடிகள் அமைக்கவும், தேவையான இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ள 3 சோதனைசாவடிகள் மாற்றியமைக்கப்படவும் உள்ளது. மேலும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி ஊர்களிலிருந்து வரும் நபர்களை மாவட்ட எல்லையிலேயே சோதனை செய்து தனிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவினை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம், இந்திய தொற்றுநோய் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, உதவி கலெக்டர்கள் கோட்டைகுமார், மணிராஜ், துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story