கோவில்பட்டி அருகே, சோதனைச்சாவடியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு


கோவில்பட்டி அருகே, சோதனைச்சாவடியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு
x
தினத்தந்தி 18 Jun 2020 11:00 PM GMT (Updated: 18 Jun 2020 6:21 PM GMT)

கோவில்பட்டி அருகே சோதனைச்சாவடியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.

கோவில்பட்டி, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல்வேறு கட்டங்களாக ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மண்டலங்களுக்கு உள்ளேயே அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மண்டலங்களுக்கு வெளியே செல்வதற்கு, இ-பாஸ் பெற்று செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்ததால், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரையிலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதையடுத்து சென்னையில் வசித்து வரும், தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி விலக்கு சோதனைச்சாவடியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

அந்த வழியாக வாகனங்களில் வருகிறவர்களிடம் இ-பாஸ் பெறப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. தொடர்ந்து அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கின்றனர். இதனால் அங்கு சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

கலெக்டர் ஆய்வு

மேலும் சோதனைச்சாவடிகளுக்கு வராமல், கிராமப்புறங்கள் வழியாக மாவட்ட எல்லைகளைக் கடந்து செல்லக்கூடிய அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. அங்கும் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று தோட்டிலோவன்பட்டி விலக்கு சோதனைச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், விருதுநகர் மாவட்ட எல்லையான சிவனணைந்தபுரம் விலக்கு சோதனைச்சாவடியிலும் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தாலுகா ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரையிலும் 19 ஆயிரத்து 873 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 329 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 156 பேர் சிகிச்சையில் உள்ளனர். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலும், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அந்தந்த தாலுகாக்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு 1,600 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டாலும், அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் உரிய சிகிச்சை அளிக்க தயார்படுத்தப்பட்டு உள்ளது.

சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு

கடந்த ஒரு வாரமாக வெளி மாவட்டங்களில் இருந்து உரிய அனுமதியுடனும், அனுமதியின்றியும் ஏராளமானோர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட எல்லைகளான கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி விலக்கு, எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை விலக்கு, வேம்பார் உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சோதனைச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு, வாகனங்களை விரைந்து அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

போலி இ-பாஸ் மூலமாக வருகிறவர்களைக் கண்டறிய, சோதனைச்சாவடிகளில் உள்ள போலீசாரின் செல்போன்களில் கியு.ஆர். ஸ்கேனர் செயலி பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. துக்க வீட்டுக்கு செல்வதற்கு என தவறான தகவல் அளித்து, கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்து பெற்று 9 பேர் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தனர். அவர்கள் வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, துணை போலீஸ் சூப்பிரண்டு கலை கதிரவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி, தாசில்தார் மணிகண்டன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story