லடாக்கில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனி உடல் முப்படை மரியாதையுடன் அடக்கம் - ராமநாதபுரம் அருகே நடந்தது
லடாக்கில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல் அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கல்லூரில் முப்படை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
ராமநாதபுரம்,
லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் ராணுவ வீரர் பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்தநிலையில் ராணுவ வீரர் பழனியின் உடல் நேற்று முன்தினம் இரவு மதுரைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, பின்னர் அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடுக்கலூர் கிராமத்திற்கு நேற்று அதிகாலை 3.20 மணிக்கு வாகனம் மூலம் வந்தடைந்தது. அங்கு ராணுவ வீரர்கள் பழனி உடல் அடங்கிய பெட்டியை சுமந்தபடி எடுத்து வந்து அவருடைய வீட்டின் முன்பு இருந்த திடலில் வைத்தனர். அவரது உடலை பார்த்து பெற்றோர், மனைவி குழந்தைகள், உறவினர்கள் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பழனி உடல் வைக்கப்பட்டு இருந்த பெட்டி மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு முப்படையினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் காலை 7 மணி அளவில் இறுதிச்சடங்கு ஆரம்பமானது. முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செய்து, பழனியின் உடலை அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்ய கொண்டு வந்தனர்.
ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் மற்றும் முப்படை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பழனியின் மகன் பிரசன்னா இறுதிச்சடங்கு செய்தார். அதன்பின்னர் பழனி உடல் மீது போர்த்தப்பட்டு இருந்த தேசிய கொடி அகற்றப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் ராணுவ வீரர் பழனியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக பழனியின் உடல் வந்தடைந்ததும் அதிகாலை 3 மணி அளவில் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் ராணுவ வீரரின் சொந்த ஊரான கடுக்கலூர் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து தமிழக அரசு அறிவித்த நிவாரணத்தொகை ரூ.20 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story