கடலூர் மாவட்டத்தில், முக கவசம் அணியாத 468 பேருக்கு அபராதம்


கடலூர் மாவட்டத்தில், முக கவசம் அணியாத 468 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 19 Jun 2020 8:58 AM IST (Updated: 19 Jun 2020 8:58 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 468 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பொது இடங்களில் சுற்றி திரிபவர்களுக்கு காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அபராதம் விதித்து வருவதோடு, அவர்களுக்கு கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மஞ்சக்குப்பம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த பஸ்களை போலீசார் மறித்து, பயணிகள் யாரேனும் முக கவசம் அணியாமல் பயணம் செய்கிறார்களா? என பார்வையிட்டனர். இதில் முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் இருசக்கர வாகனங்களில் முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று மட்டும் கடலூர் நகரில் 268 பேரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தொரப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சுகாதார ஆய்வாளர் சத்திய நாராயணன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் புதுப்பேட்டை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த 120 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர புதுப்பேட்டை பகுதியில் உள்ள முக்கிய சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஸ்ரீமுஷ்ணத்தில் முக கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 80 பேருக்கு ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் அன்பரசு, பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பிரபாகரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் தலா ரூ.100 அபராதம் விதித்தனர். மேலும் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கினர்.

Next Story