மதுரை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக போலீஸ்காரருக்கு கொரோனா


மதுரை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக போலீஸ்காரருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 Jun 2020 5:25 AM GMT (Updated: 19 Jun 2020 5:25 AM GMT)

மதுரை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு பணியாற்றிய 120-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை அழகர்கோவில் சாலை சர்வேயர் காலனியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் தளத்தில் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம், விரல்ரேகை பிரிவு அலுவலகம், தொழில்நுட்ப பிரிவு, அமைச்சு பணியாளர் அலுவலகம் ஆகியவையும், முதல் தளத்தில் போலீஸ் சூப்பிரண்டு அறையும், போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு அலுவலகம், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் செயல்படுகின்றன. அங்கு போலீஸ்காரர்கள், அமைச்சு பணியாளர்கள் என 120-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் அங்குள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த 35 வயது போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன.

இதைதொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவருடன் பணியாற்றிய சக போலீஸ்காரர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அவர்கள் அனைவரும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கின்றனர். ஒரு சில தினங்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் மற்ற பணிகள் எதுவும் நடைபெறாது எனவும், 4 நாட்களுக்கு தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெறும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.மேலும் அங்குள்ள பணியாளர்கள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு பரிசோதனைகள் செய்த பின்னரே பணிக்கு வருமாறு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவசர பணிக்காக ஒரு சிலர் மட்டுமே அலுவலகத்திற்கு வந்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story