தஞ்சை மாவட்டத்தில், ஒரே நாளில் அதிகபட்சமாக 21 பேருக்கு கொரோனா - பாதிப்பு 204 ஆக அதிகரிப்பு
தஞ்சை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், அதிகபட்சமாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. பாதிப்பு 204 ஆக அதிகரித்துள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 183 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் நுகர்பொருள் வாணிப கழகத்தில் தட்டச்சராக பணியாற்றும் தஞ்சையை சேர்ந்த 48 வயதான ஆணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மேலும் பட்டுக்கோட்டை ராஜாமடம் கீழத்தெருவை சேர்ந்த 9 வயது பெண் குழந்தை, ஒரத்தநாடு நெய்வேலி தென்பாதியை சேர்ந்த 55 வயது பெண், அவருடைய மகன், பட்டுக்கோட்டை அருகே அழகியநாயகிபுரத்தை சேர்ந்த 26 வயது பெண், கொல்லைக்காடை சேர்ந்த 25 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் கீழவீதியை சேர்ந்த 37 வயது ஆண், கும்பகோணம் சுவாமிமலை உத்திரையை சேர்ந்த 51 வயது ஆண், ஒரத்தநாடு மூர்த்தியம்பாள்புரத்தை சேர்ந்த 21 வயது பெண், தஞ்சை அருகே உள்ள கொ.வல்லுண்டாம்பட்டு கிராமத்தை சேர்ந்த 40 வயது ஆண், கும்பகோணம் சர்ச் சாலையை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை, பட்டுக்கோட்டை அருகே செருவாவிடுதியை சேர்ந்த 42 வயது ஆண், அதிராம்பட்டினம் அருகே சானாவயலை சேர்ந்த 53 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மேலும் சென்னையில் இருந்து தஞ்சை வந்த திருக்காட்டுப்பள்ளி ஒன்பத்து வேலியை சேர்ந்த கணவன்-மனைவி, வளவன்புரம் வி.வி. நகரை சேர்ந்த 46 வயது ஆண், பாபநாசம் பகுதியை சேர்ந்தவர்கள் என மொத்தம் 21 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை அதிகபட்சமாக ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று அதிகபட்சமாக 21 பேருக்கு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 204 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 130 பேர் இதுவரை குணம் அடைந்து வெவ்வேறு நாட்களில் வீடு திரும்பி உள்ளனர்.
Related Tags :
Next Story