சென்னிமலை கொடுமணலில் நடந்த அகழாய்வில் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைகள் கண்டுபிடிப்பு


சென்னிமலை கொடுமணலில் நடந்த அகழாய்வில் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 19 Jun 2020 7:25 AM GMT (Updated: 19 Jun 2020 7:25 AM GMT)

சென்னிமலை கொடுமணலில் நடந்த அகழாய்வில் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னிமலை, 

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றங்கரையில் உள்ளது கொடுமணல் கிராமம். இங்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால் 1981-ம் ஆண்டு முதல் தஞ்சாவூரில் உள்ள தமிழ் பல்கலைக்கழகம், தமிழக தொல்லியல் துறை மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகம் ஆகியவை சார்பில் கொடுமணலில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொடுமணலில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் உயர்ந்த பட்ச நாகரீகத்தோடு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அகழாய்வு பணிகள் நடைபெறும் போதெல்லாம் கிடைத்துள்ளன. மேலும் வெளிநாடுகளுடன் வணிகம் நடந்ததும், தங்கநகைகள் மற்றும் வண்ண கற்கள் பட்டை தீட்டும் தொழிற் கூடங்கள் செயல்பட்டதற்கான உண்மை அடையாளங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2018-ம் ஆண்டு தொல்லியல் துறை அகழாய்வு துறையினர் பெங்களூருவில் இருந்து வந்து 4 மாதங்கள் கொடுமணலில் அகழாராய்ச்சி செய்தார்கள். அப்போது தமிழ்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஏராளமான மண் பாண்டங்கள் கிடைத்தன.

இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக தமிழக தொல்லியல் துறையின் திட்ட இயக்குனர் ஜெ.ரஞ்சித் தலைமையில் 7 பேர் கொடுமணல் பகுதியில் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் கொடுமணலில் கல்லங்காடு என்ற இடத்தில் சுமார் 2 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முந்தைய பொதுமக்கள் பயன்படுத்திய கல்லறைகளும், அதே பகுதியில் செலாவனக்காடு என்ற இடத்தில் கருவிகள் மற்றும் அணிகலன்கள் தயார் செய்த தொழிற்சாலைகளும் இருந்ததற்கான அடையாளங்களை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து தொல்லியல்துறை திட்ட இயக்குனர் ஜெ.ரஞ்சித் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கொடுமணலில் தற்போது நடப்பது 8-வது அகழாய்வு பணி. இங்கு சுமார் 250 இடங்களில் கல்லறைகள் (பெருங்கற்கால ஈமச்சின்னம்) இருந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லறைகளை சுற்றிலும் பெரிய அளவிலான கற்கள் வட்டமாக காணப்படுகிறது. இதில் நாங்கள் ஒரு கல்லறையை தோண்டி ஆய்வு செய்தபோது 6 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் மற்றும் 1 மீட்டர் ஆழத்தில் முற்றத்துடன் கூடிய 2 அறைகளாக பிரிக்கப்பட்டு இருந்தது.

இறந்தவர்களின் உடலை அப்படியே கல்லறைகளில் புதைக்காமல் உடல்களை எரித்த பின்பு அந்த எலும்புகளை ஒரு அறையிலும், மற்றொரு அறையில் இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் வைத்துள்ளனர்.

ஒரு கல்லறையில் மட்டும் பெரிய அளவிலான கல்லை நட்டு வைத்துள்ளனர். அது ஊர்த்தலைவர் அல்லது அப்போது அந்த மக்களை வழிநடத்தியவரின் எலும்புகள் வைக்கப்பட்டு இருந்த கல்லறையாக இருக்கலாம்.

இந்த கல்லறையின் அருகில் ஈமச்சடங்கு செய்ததன் அடையாளமாக வேலைப்பாடுகளுடன் கூடிய 10 மண்பானைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தண்ணீர் புகாத வண்ணம் வேலைப்பாடுகளும் காணப்படுகிறது.

செலாவனக்காடு என்ற இடத்தில் அகழாய்வு செய்தபோது அங்கு கருவிகள், அணிகலன்கள் போன்றவைகளை தயார் செய்ய செம்பு, இரும்பு ஆகியவற்றை உருக்கி எடுக்க கொல்லுப்பட்டறைகள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.

2 பச்சை கற்கள், சிறிய அளவிலான 2 தங்க துண்டுகள், ஏராளமான உடைந்த மண்பானைகள், பாசிமணிகள் மற்றும் விலங்கு ஒன்றின் தலைப்பகுதி எலும்பு ஆகியவையும் கிடைத்துள்ளன. கல்லறைகளும், கொல்லுப்பட்டறைகளும் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். அகழாய்வு பணியை முழுமையாக நடத்தினால் இன்னும் ஏராளமான அரிய தகவல்கள், அடையாளங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story