மீன் வாங்க வந்த வியாபாரிக்கு கொரோனா: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மூடல்


மீன் வாங்க வந்த வியாபாரிக்கு கொரோனா: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மூடல்
x
தினத்தந்தி 20 Jun 2020 4:00 AM IST (Updated: 20 Jun 2020 12:35 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க வந்த வியாபாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், மீன்பிடி துறைமுகம் மூடப்பட்டது. அங்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தடைக்காலத்துக்கு பிறகு கடந்த 1-ந்தேதி முதல் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்கின்றனர். அதிக அளவில் மக்கள் நடமாட்டம் இருப்பதால், மீன்பிடி துறைமுகத்துக்குள் செல்லும் அனைவருக்கும் ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூடல்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு செய்துங்கநல்லூரைச் சேர்ந்த மீன் வியாபாரி வந்து மீன்களை வாங்கி சென்றாராம். நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், தூத்துக்குடி மாநகர நல அலுவலர்கள் மற்றும் மீன்வளத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், மீன்பிடி துறைமுகம் நேற்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். அதன்படி நேற்று மீன்பிடி துறைமுகம் மூடப்பட்டது. மாநகர சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் தலைமையில் மீன்பிடி துறைமுகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களுக்கு மருந்து தெளிக்கப்பட்ட பிறகு மீன்பிடி துறைமுகம் மீண்டும் செயல்பட தொடங்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

வணிக வளாகம்

இதேபோன்று தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள கடை உரிமையாளர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த வணிக வளாகம் நேற்று மூடப்பட்டது. மேலும் தூத்துக்குடி தனியார் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த முள்ளக்காட்டைச் சேர்ந்த 6 பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தொடர்ந்து அந்த நிறுவனம் மூடப்பட்டு, பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story