தென்காசியில் மேலும் 2 பேருக்கு கொரோனா: ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் பொதுமக்களுக்கு பரிசோதனை
தென்காசியில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மருத்துவ குழுவினர் முகாமிட்டு பொதுமக்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் உடல் வெப்ப பரிசோதனை நடத்தினர்.
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்காசி அருகே உள்ள மேலகரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தென்காசி நகரின் கிழக்குப்பகுதியில் 47 வயதுடைய ஆண் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு வாரத்துக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. அதற்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன்பிறகு மீண்டும் காய்ச்சல் வந்தது. இதனால் அவருக்கு சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்ட ஒருவரின் மருந்துக்கடையில் மருந்து வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் தென்காசியை சேர்ந்த 50 வயதுடைய சைக்கிள் கடைக்காரர் ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதியானது.
தென்காசியின் கிழக்குப்பகுதியில் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து கீழப்புலியூரில் உள்ள ஒரு மண்டபம், தாய் சேய் நல விடுதி, உச்சிமாகாளியம்மன் கோவில் தெரு பூங்கா, புதுமனை 2-ம் தெரு ஆகிய பகுதிகளில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தினர். காய்ச்சல் இருப்பவர்களை பரிசோதனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. மேலும் கீழப்புலியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நகராட்சி பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள்.
வெளியே வரவேண்டாம்
இதுகுறித்து தென்காசி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா, சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில் ஆகியோர் கூறியதாவது:- மாவட்ட கலெக் டர் அருண் சுந்தர் தயாளன் உத்தரவின்பேரில் தென்காசி நகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வரவேண்டும். அவ்வாறு வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். யாருக்காவது காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து உங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் வந்தால் உடனடியாக மாவட்ட கலெக் டர் அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story