தொழில் போட்டி காரணமாக லாரி உரிமையாளர் கடத்தல் - 4 பேர் கைது
தொழில் போட்டி காரணமாக லாரி உரிமையாளரை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
வேலூரை சேர்ந்தவர் கோட்டீஸ்வரன்(வயது 47). இவர், பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் தங்கி, சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லியில் இருந்து லாரியில் எந்திரம் ஒன்றை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் நோக்கி புறப்பட்டு சென்றார். லாரியை டிரைவர் டில்லிபாபு ஓட்டினார். அவர்களுடன் கிளனர் அன்பு உடன் இருந்தார்.
பூந்தமல்லி அருகே சென்றபோது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென லாரியை மடக்கினர். பின்னர் லாரியில் இருந்த கோட்டீஸ்வரனை அடித்து, உதைத்து தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச்சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் மற்றும் கிளனர் இருவரும் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
4 பேர் கைது
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பூந்தமல்லி உதவி கமிஷனர் செம்பேடு பாபு, இன்ஸ்பெக்டர் கிரி ஆகியோர் தலைமையிலான போலீசார், அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். லாரி டிரைவர் மற்றும் கிளனர் மீது சந்தேகம் வந்ததால் அவர்களிடம் விசாரித்தனர். அதில் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள்.
இதையடுத்து இருவரிடமும் தீவிரமாக விசாரித்தபோது லாரி உரிமையாளர் கோட்டீஸ்வரன் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் அளித்த தகவலின்பேரில் சென்னீர்குப்பத்தை சேர்ந்த இந்து என்ற தாஸ்(28), காடுவெட்டியைச் சேர்ந்த விமல்(29) ஆகிய மேலும் 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் கடத்திச்சென்ற கோட்டீஸ்வரனையும் பத்திரமாக மீட்டனர்.
தொழில் போட்டி
இதுகுறித்து போலீசார் மேலும் விசாரித்தபோது, கைதான இந்துவும் லாரி வைத்து தொழில் செய்து வந்தார். இதனால் லாரிகளுக்கு லோடு பிடிப்பதில் இந்துவுக் கும், கோட்டீஸ்வரனுக்கும் தொழில் போட்டி ஏற்பட்டது.
நேற்று முன்தினம் கோட்டீஸ்வரனுக்கு உடல்நிலை சரி இல்லாததால் டில்லிபாபு என்பவரை புதிதாக டிரைவர் வேலைக்கு அமர்த்தி உள்ளார். அவரிடம் கோட்டீஸ்வரனை கடத்தப்போவதாக இந்து தெரிவித்தார். இதற்கு அவரும், கிளனரும் உடந்தையாக செயல்பட்டதும் தெரிந்தது. பின்னர் கைதான 4 பேரையும் சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவான மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story