உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம்: இருதரப்பு மோதலில் 20 வீடுகள் சூறை - விருத்தாசலம் அருகே பதற்றம்; போலீஸ் குவிப்பு


உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம்: இருதரப்பு மோதலில் 20 வீடுகள் சூறை - விருத்தாசலம் அருகே பதற்றம்; போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 19 Jun 2020 10:15 PM GMT (Updated: 20 Jun 2020 4:16 AM GMT)

விருத்தாசலம் அருகே உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 வீடுகள் சூறையாடப்பட்டது. தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அய்யாசாமி மனைவி தனலட்சுமி. உள்ளாட்சி மன்ற தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட அதேபகுதியை சேர்ந்த வரதராஜ் மனைவி கனிமொழி என்பவர் தோல்வியடைந்தார். இதன் காரணமாக இவர்களுக்கிடையே முன்விரோதம் உள்ளது.

நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடிப்பதற்காக வரதராஜியின் ஆதரவாளரான விஜயகுமார் சென்றார். அப்போது அங்கிருந்த மின்மோட்டார் பழுதடைந்து இருந்தது. விஜயகுமார் தான் மின்மோட்டாரை பழுதடைய செய்துவிட்டார் என்று அய்யாசாமி தரப்பினர் தெரிவித்து, அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இது தொடர்பாக இருதரப்பினரும் விருத்தாசலம் போலீசில் தனித்தனியே புகார் செய்தனர். இதையடுத்து நேற்று விசாரணை நடத்துவதற்காக, விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு, இருதரப்பினரையும் அழைத்து உள்ளனர். இதை தொடர்ந்து நாளை(அதாவது இன்றும்) விசாரணைக்கு வருமாறு கூறி அவர்களை போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

ஊருக்கு திரும்பிய அவர்களுக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அய்யாசாமி தரப்பினர் வரதராஜ் தரப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் இருந்த பொருட்களை அடித்து சூறையாடி, அங்கிருந்த மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் கிராமத்தில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்த ஓட்டம் பிடித்தனர். அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர்.

இதன்னிடையே தகவலறிந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது மோதலில் ஈடுபட்ட சிலரை போலீஸ் நிலையத்துக்கு பிடித்து சென்றனர். தொடர்ந்து கிராமத்தில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story