திருவெண்ணெய்நல்லூர் அருகே, மணல் குவாரியை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி


திருவெண்ணெய்நல்லூர் அருகே, மணல் குவாரியை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 20 Jun 2020 4:45 AM GMT (Updated: 2020-06-20T10:14:30+05:30)

திருவெண்ணெய்நல்லூர் அருகே மணல் குவாரியை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனர்.

அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.புதுப் பாளையம், அன்டராயனூர் பகுதியில் அரசு மணல் குவாரி அமைத்து மணல் விற்பனை நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் மணல் குவாரி அமைத்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவ சாயம் பாதிக்கப்படுவதாகவும், குடிநீர் பிரச்சினை ஏற்படுவ தாகவும், எனவே இங்குள்ள மணல் குவாரியை மூட வேண்டும் என்று டி.புதுப் பாளையம், அன்டராயனூர், டி.எடையார், சித்திலிங்கமடம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், திருக்கோவி லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி தலைமையில் ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் மற்றும் ஏராளமான பொது மக்கள் திரண்டு சென்று அந்த மணல் குவாரியை முற்றுகை யிட முயன்றனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் பாண்டியன், தாசில்தார் வேல்முருகன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டம் நடத்த முயன்றவர்களை தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அந்த மணல் குவாரியை பொன்முடி எம்.எல்.ஏ. பார்வை யிட்டார்.

அதன் பிறகு அவர், நிருபர்களிடம் கூறுகையில், தென்பெண்ணை ஆற்றின் பல இடங்களில் மணல் குவாரி அமைத்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டிலேயே அணைக்கட்டு பகுதியில் மணல் குவாரி அமைப்பதை தடுத்து நிறுத்தி உள்ளோம். இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஊற்று இல்லாமல் போனதற்கு மணல் குவாரிகள் தான் காரணம். மக்களின் கருத்துகளை கேட்டு அரசு முடிவு எடுக்க வேண்டும். இந்த மணல் குவாரியை உடனடியாக மூட வேண்டும். இல்லையெனில் தி.மு.க. சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story