மோகனூர் அருகே, பழ வியாபாரியை கொன்ற தம்பி கைது - பரபரப்பு வாக்குமூலம்
மோகனூர் அருகே பழ வியாபாரி கத்தியால் குத்திக்கொன்ற அவரது தம்பி கைது செய்யப்பட்டார். மேலும் அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மோகனூர்,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வளையப்பட்டி கஸ்தூரி மலை ரோடு பகுதியை சேர்ந்தவர் சோழராஜா (வயது 65). இவருடைய தம்பி ராசய்யா என்ற நாகேஷ் (55). இவர்கள் பழ வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் சோழராஜாவுக்கும், நாகேசுக்கும் நேற்று முன்தினம் வாய்த்தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றியதில் நாகேஷ் தான் வைத்திருந்த கத்தியால் அண்ணன் சோழராஜாவை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் அவர் இறந்தார். மோகனூர் இன்ஸ்பெக்டர் சுகுமார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நாகேசை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் வளையப்பட்டியில் இருந்து காட்டுப்புத்தூர் செல்லும் சாலையில் பதுங்கி இருந்த நாகேசை போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் சம்பவத்தன்று எனது தங்கையின் மருமகனுடன் சென்று மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தேன். அப்போது அண்ணன் சோழராஜா, தனக்கு ஏன் மது வாங்கி வரவில்லை என கேட்டு என்னை கல்லை எடுத்து எறிந்தார். அந்த கல் என் முகத்தில் பட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. இதனால் ஆத்திரம் அடைத்த நான் மாங்காய் வெட்டும் கத்தியை எடுத்து சோழராஜாவை கழுத்தில் குத்திவிட்டு, பின்னர் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி பதுங்கியிருந்த என்னை கைது செய்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story