தர்மபுரி மாவட்டத்தில், 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் - முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் கண்டறிந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முதன்மை செயலாளர் சந்தோஷ்பாபு அறிவுறுத்தினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் முன்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தமிழக அரசின் முதன்மை செயலரும், தர்மபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சந்தோஷ்பாபு தலைமையில் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் கலெக்டர் மலர்விழி, போலீஸ் சூப்பிரண்டு ராஜன், உதவி கலெக்டர் பிரதாப், ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூவதி, சிறப்பு அலுவலர் சீனிவாசராஜ், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செல்வி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது காணொலி காட்சி மூலம் முதன்மை செயலர் சந்தோஷ்பாபு பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் அனைவரும் முககவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதிபடுத்த வேண்டும். மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் புள்ளி விவரங்களை சேகரித்து அவர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு மேலும் எவ்வளவு பேர் வருவார்கள் என்ற விவரங்களை வருவாய் துறையினர் மற்றும் உளவு பிரிவினர் இணைந்து கண்காணித்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு இனிமேல் இ-பாஸ் வழங்குவதை அதிகப்படுத்த வேண்டும். கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் சுழற்சி முறையில் ஓய்வு அளிக்க வேண்டும். ஒரேநேரத்தில் அதிகமான கொரோனா நோயாளிகள் தர்மபுரி மாவட்டத்திற்கு வந்தால் என்னென்ன? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பது குறித்து ஒரு திட்டம் தயாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story