திருவையாறு அருகே, வீட்டு தோட்டத்துக்குள் படையெடுத்த வெட்டுக்கிளிகள் - விவசாயிகள் அச்சம்
திருவையாறு அருகே வீட்டு தோட்டத்துக்குள் வெட்டுக்கிளிகள் படையெடுத்தன. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
திருவையாறு,
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கோனேரிராஜபுரம் மணத்திடல் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயியான இவர், தனது வீட்டு தோட்டத்தில் பலா, பப்பாளி உள்ளிட்ட மரங்களையும், சுண்டைக்காய், கருவேப்பிலை உள்ளிட்ட பல்வேறு வகையான செடிகளையும் வளர்த்து வருகிறார்.
நேற்று அவருடைய தோட்டத்துக்குள் கூட்டம், கூட்டமாக வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்தன. அவற்றில் பல தோட்டத்தில் இருந்த மரங்கள் மற்றும் செடிகள் மீது அமர்ந்து இலை, காய்களை சேதப்படுத்திக்கொண்டிருந்தன. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
தனது தோட்டத்துக்கு படையெடுத்து வந்த வெட்டுக்கிளிகள், வட மாநிலங்களில் பயிர்களை நாசம் செய்த பாலைவன வெட்டுக்கிளிகளாக இருக்குமோ? என்ற அச்சம் அடைந்தார். இந்த தகவல் அந்த பகுதி விவசாயிகள் மத்தியில் பரவியது. இதனையடுத்து விவசாயிகள் பலர் சிவக்குமாரின் தோட்டத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர்.
கூட்டம், கூட்டமாக வெட்டுக்கிளிகள் அமர்ந்து இருந்ததை பார்த்த விவசாயிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து தஞ்சை மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் சாருமதி, ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி பூச்சியியல் துறை பேராசிரியர் செங்குட்டுவன், இணை பேராசியர் கல்யாணசுந்தரம், புழுவியல் உதவி பேராசிரியர் சண்முகப்பிரியா, வேளாண்மை துனை இயக்குனர் கோமதி தங்கம் ஆகியோர் விவசாயி சிவக்குமார் வீட்டின் தோட்டத்துக்கு சென்று அங்கிருந்த வெட்டுக்கிளிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். சில வெட்டுக்கிளிகளை வேளாண் அதிகாரிகள், ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.
இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் சாருமதி நிருபர்களிடம் கூறியதாவது:-
தோட்டத்துக்குள் வந்தவை உள்ளூர் வெட்டுக்கிளிகள்தான். இதை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பரிந்துரை செய்த மருந்துகளை பயன்படுத்தலாம்.
இவை பாலைவன வெட்டுக்கிளிகள் என விவசாயிகள் அஞ்ச வேண்டாம். இதுபோன்ற வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த அதிக வீரியம் கொண்ட ரசாயன மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story