திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சு மருத்துவ உதவியாளர் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர்,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனாவால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-க்கும் குறைவாக இருந்தது. இதன் பிறகு படிப்படியாக உயர தொடங்கியது. கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரம் பேரையும் தாண்டி விட்டது.
இதுபொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. வருகிற 30-ந் தேதி வரை 5-வது கட்ட ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் இருந்து வந்து கொண்டிருக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் தற்போது 2-வது கட்டமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. பலரும் இதன் மூலம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் திருப்பூரில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் வரை சுகாதாரத்துறையின் திருத்தப்பட்ட பட்டியலின் படி திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 120 பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று 108 ஆம்புலன்சு மருத்துவ உதவியாளர் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு வரை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது. தற்போது கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி நேற்று 108 ஆம்புலன்சு மருத்துவ உதவியாளர் உள்பட 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 22 வயதான ஆம்புலன்சு மருத்துவ உதவியாளர் மங்கலம் பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார். கடந்த வாரம் தனது சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு சென்று வந்துள்ளார். இதன் பின்னர் அவரின் சளி மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் மற்றொருவரான ஆண்டிபாளையம் குளத்துப்புதூரை சேர்ந்த 30 வயது ஆண் சென்னையில் நடந்த உறவினர் திருமணத்திற்கு காரில் தனது குடும்பத்துடன் சென்று வந்துள்ளார். திருப்பூருக்கு வந்த அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பபட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சுகாதார பட்டியல் நிலவரப்படி 120 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மருத்துவ உதவியாளர் உள்பட 2 பேரையும் சேர்த்து மொத்தம் 119 பேர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை சுகாதாரத்துறை மூலம் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் நேற்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதாவது நல்லூர் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்த 28 வயது பெண், கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த 29 வயது பெண் ஆகிய இருவரும் சென்னையில் இருந்து வந்ததால் இவர்களது கொரோனா பாதிப்பு கணக்கு சென்னையில் இணைக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல்லடம் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த 27 வயது ஆணின் முகவரி திருப்பூரில் இருந்ததால், அவரது கணக்கு நேற்று முன்தினம் திருப்பூரில் சேர்க்கப்பட்டது. நேற்று இவரது கணக்கு கோவையில் இணைக்கப்பட்டது. இதன் காரணமாக 120 பேர் என இருந்ததில் 3 பேரில் கணக்கும் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டதால், 117 ஆக இருந்தது. இதன் பின்னர் நேற்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது என பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story