ஈரோடு மாவட்டத்தில், 2 வாலிபர்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79-ஆக உயர்வு
ஈரோடு மாவட்டத்தில் 2 வாலிபர்கள் உள்பட 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79-ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 76 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இதில் ஒருவர் இறந்துவிட்டார். 72 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மீதமுள்ள 3 பேர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஈரோடு வளையக்கார வீதி குட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவருக்கும், சென்னையில் இருந்து ஈரோடு வந்த 30 வயது பெண் ஒருவருக்கும், சிவகிரி வந்த 25 வயது வாலிபருக்கும் என 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6 பேர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும், சென்னையில் பணியாற்றி ஈரோடு வந்த 28 வயது பெண், சித்தோடு அருகே உள்ள மேட்டுநாசுவம்பாளையம் பகுதியை சேர்ந்த 30 வயது பெண், ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த ஆடிட்டர் ஒருவருக்கும் என 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதாகவும், இவர்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் கூட வாய்ப்புள்ளதால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story