புதுக்கோட்டையில், கொரோனா பாதிப்பு 107 ஆக உயர்ந்தது - காரையூரில் கடைகள் அடைப்பு
புதுக்கோட்டையில் கொரோனா பாதிப்பு 107 ஆக உயர்ந்தது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை உள்பட பிற மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில் கொரோனா பாதித்தவர்களின் பட்டியலில் புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் 3-ம் வீதியில் 30 வயது வாலிபர் ஒருவருக்கும், காமராஜ் நகரை சேர்ந்த 32 வயது ஆண், அனவயலை சேர்ந்த 20 வயது இளம்பெண், மலைக்குடிப்பட்டியை சேர்ந்த 29 வயது ஆண், 4 வயது சிறுமி, வெண்ணாவல்குடியை சேர்ந்த 24 வயது இளம்பெண், 30 வயது வாலிபர், குளவாய்பட்டியை சேர்ந்த 29 வயது வாலிபர் ஆகியோருக்கு தொற்று உறுதியாகி இருந்தது.
கொரோனா பாதித்த அனைவரும் சிகிச்சைக்காக ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்தது. இதில் 49 பேர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். 56 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் 3-ம் வீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் வசித்த பகுதியை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தொற்று பாதித்த நபரின் வீட்டை சுற்றி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சமீபத்தில் ஊர் திரும்பிய 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் தம்பிதுரை ஆகியோர் மேற்பார்வையில், வட்டார சுகாதார ஆய்வாளர் சந்திரன் மற்றும் அந்தந்த பகுதி சுகாதார துறை அலுவலர்கள், செவிலியர்கள் அவர்களுக்கு பரிசோதனை செய்தனர்.
சென்னையில் இருந்து திருமயம் பாப்பாவயல் பகுதிக்கு வந்த பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவரது உறவினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலரின் ரத்தம் மற்றும் சளி மாதிரியை சுகாதாரத்துறையினர் எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர். பரிசோதனை முடிவில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளதால் திருமயம் பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
வடகாடு அருகேயுள்ள அனவயல் எல்.என்.புரத்தில் சென்னையில் இருந்து வந்த இளம்பெண்ணுக்கு புதிதாக கொரோனா தொற்று
ஏற்பட்டதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அப்பெண்ணின் உறவினர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரிமளம் ஒன்றியம் தேக்காட்டூர், நமணசமுத்திரம், கடியாபட்டி, ராயவரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்னையில் இருந்து வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் கடியாபட்டி மாமரத்தான் வீதியை சேர்ந்த 35 வயது பெண்ணிற்கு தொற்று உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனையொட்டி அப்பகுதியில் சுகாதார துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்னமராவதி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரையூர் ஊராட்சி பகுதியில் சென்னையில் இருந்து வந்த ஒரு சிலருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிய வந்ததை தொடர்ந்து ஊராட்சி தலைவர் முகமது இக்பால், துணைத்தலைவர் அடைக்கன் ஆகியோர் 19 மற்றும் 20-ந் தேதி ஆகிய 2 நாட்கள் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
கீரமங்கலம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அவர்கள் வீடு அமைந்துள்ள பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன் சாலைகளும் மூடப்பட்டது. அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story