திருச்சி அரசு மருத்துவமனையில் 2 பெண் டாக்டர்களுக்கு கொரோனா - போலீஸ் துணை கமிஷனரின் டிரைவருக்கும் தொற்று உறுதி
திருச்சி அரசு மருத்துவமனையில் 2 பெண் டாக்டர்களுக்கும், போலீஸ் துணை கமிஷனரின் டிரைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி,
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாநகரத்துக்குட்பட்ட வரகனேரி, குப்பாங்குளம், தில்லைநகர் என பல பகுதிகளிலும் பலர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புக்குள்ளானவர்கள் வசிக்கும் பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் டாக்டர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. கொரோனா பாதித்த பெண் நோயாளிக்கு சிகிச்சை அளித்ததன் மூலம் இரு பெண் டாக்டர்களுக்கும் தொற்று பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதேபோல் திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனரின் டிரைவரான ஆயுதப்படையை சேர்ந்த 27 வயதுடைய போலீஸ்காரருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்னையில் இருந்து சிலர் வந்து சென்றுள்ளனர். இதன் காரணமாக அவருக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. துணை கமிஷனரின் டிரைவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் திருச்சி ஹீபர்ரோட்டில் உள்ள துணை கமிஷனர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் உப்பிலியபுரம் அருகே உள்ள வைரிசெட்டிப் பாளையத்திற்கு கடந்த 4 நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து வந்த ஒரு குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் நேற்று திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story