மேலும் 28 பேருக்கு பரவியது: நெல்லையில் கொரோனா பாதிப்பு 600-ஐ தாண்டியது


மேலும் 28 பேருக்கு பரவியது: நெல்லையில் கொரோனா பாதிப்பு 600-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 20 Jun 2020 11:15 PM GMT (Updated: 20 Jun 2020 5:57 PM GMT)

நெல்லையில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையொட்டி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது. தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நேற்று மேலும் 28 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில் 7 பேர் மும்பையில் இருந்து வந்தவர்கள். மீதியுள்ள 21 பேரில் நெல்லை மாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் 14 பேர்்.

இவர்களில் 6 பேர் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களில் 4 பேர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவன ஊழியர்கள். 2 பேர் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தவர்கள். டவுன், ரகுமத்நகரை சேர்ந்த தலா 2 பேர், மகிழ்ச்சிநகரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், பாளையங்கோட்டை, பெருமாள்புரம், வீரமாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த பகுதி முழுவதும் மாநகராட்சி பணியாளர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்டனர்

மேலும், நாங்குநேரியை சேர்ந்த ஒரு வயது குழந்தைக்கும், தருவையை சேர்ந்த 2 பேருக்கும், உகந்தான்பட்டி, களக்குடி, நாகல்குளம், கல்குளம், பர்கிட்மாநகரம் ஆகிய ஊர்களை சேர்ந்த தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களின் உறவினர்கள். இவர்கள் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இவர்கள் தங்கியிருந்த பகுதிகள் கொரோனா தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சென்னையில் இருந்து சீவலப்பேரிக்கு வந்த 3 குடும்பங்களின் வீடுகளிலும் தனிமைப்படுத்தபட்டோர் ஸ்டிக்கரை சுகாதார மேற்பார்வையாளர் சோமசுந்தரம் தலைமையில் தூய்மை பணியாளர்கள் ஒட்டினார்கள். இதைத்தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர்.

612 ஆக அதிகரிப்பு

நெல்லை மாவட்டத்தில் நேற்று 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையொட்டி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 612 ஆக அதிகரித்தது. இவர்களில் 415 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 194 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3 பேர் இறந்து உள்ளனர்.

தென்காசியில் 8 பேர்

தென்காசி மாவட்டத்தில் நேற்று புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஒருவர் மும்பையில் இருந்து வந்தவர். மீதி 7 பேர் உள்ளூரை சேர்ந்தவர்கள். இதில் 3 பேர் ஆலங்குளம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர்கள், 2 பேர் தென்காசி பகுதியை சேர்ந்தவர்கள். 2 பேர் தென்காசி புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 218 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 107 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 111 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடியில் 46 பேர்

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தவர்களுக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் பலருக்கு தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் அய்யனார்குளம்பட்டியை சேர்ந்த மீன் வியாபாரி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த 10 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று கடம்பூர், தருவைகுளம் மற்றும் ஆறுமுகநேரி, காயல்பட்டினம், தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 575 ஆக உயர்ந்துள்ளது.

Next Story