தென்காசி அருகே, காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் - ஆயிரம் வாழைகள் சேதம்


தென்காசி அருகே, காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் - ஆயிரம் வாழைகள் சேதம்
x
தினத்தந்தி 20 Jun 2020 10:45 PM GMT (Updated: 20 Jun 2020 7:20 PM GMT)

தென்காசி அருகே காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததில் ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்துள்ளன.

தென்காசி,

தென்காசி அருகே உள்ள வடகரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள ராயர்காடு, சீவலங்காடு, சென்னா பொத்தை உள்பட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் வாழை, தென்னை, மா உள்பட பல்வேறு பயிர் களை பயிரிட்டு வருகிறார்கள். இங்கு மலைப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் வழக்கமாக ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட சில மாதங்களில் வந்து பயிர்களை சேதப்படுத்தும். அப்போது விவசாயிகள் பட்டாசு வெடித்தும், கூட்டமாக சத்தம்போட்டும் யானைகளை விரட்டுவார்கள். யானைகள் காட்டுக்குள் சென்றுவிடும்.

ஆனால் தற்போது சில மாதங்களாக காட்டிற்குள் இருந்து வந்த யானைகள் மீண்டும் காட்டிற்குள் செல்ல மறுக்கின்றன. ஒரு இடத்தில் விரட்டினால் அடுத்த இடத்திற்கு செல்கின்றது. இங்கிருந்து புளியங்குடி வரை உள்ள பகுதிகளில் யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. சோலார் மின் வேலிகளை காலால் மிதித்து சேதப்படுத்துகின்றன. நேற்று அதிகாலை 4 யானைகள் சேர்ந்து வந்து 5 விவசாயிகளின் வாழை தோட்டத்தில் புகுந்து வாழைகளை மிதித்து சேதப்படுத்தி சென்றுள்ளன. இதில் சுமார் ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்துள்ளன.

பயிர்கள் சேதம்

இதுகுறித்து விவசாயிகள் ஜாகிர் உசேன், ஷேக் மைதீன் ஆகியோர் கூறியதாவது:-

யானைகளின் அட்டகாசம் தொடர்ந்து இந்தப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், வனத்துறையிடமும் புகார் செய்து வருகிறோம். ஆனால் யானைகளை காட்டுக்குள் விரட்டுவதற்கான முழுமையான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. எங்களது பயிர்கள் முழுவதும் சேதமடைந்து வருகின்றன. எங்களது உழைப்பு வீண் ஆகின்றது. ஏற்கனவே கொரோனா பிரச்சினையினால் நாங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம். பயிர் செய்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளோம். யானைகளால் மேலும் எங்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறை மூலம் இதற்காக தனிக்குழு அமைத்து யானைகளை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story