சென்னையில் முழு ஊரடங்கு மீறல் 2-வது நாளில் 2,791 பேர் மீது வழக்கு - 4 ஆயிரத்து 424 வாகனங்கள் பறிமுதல்
சென்னையில் முழு ஊரடங்கின் 2-வது நாளில் விதிமீறல் தொடர்பாக 2,791 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 4 ஆயிரத்து 424 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை,
முழு ஊரடங்கு தொடங்கிய 2-வது நாளில் இதுவரை ஊரடங்கு விதிகளை மீறியதாக 2,791 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 424 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 4,144 இரு சக்கர வாகனங்கள் அடங்கும். சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள், முககவசம் அணியாதவர்கள் என 1,133 பேர் மீது தனியாக வழக்கு போடப்பட்டுள்ளது. 2 நாளிலும் சேர்த்து 6 ஆயிரத்து 424 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்று கடுமையாக இருக்கும்
முழு ஊரடங்கில் இன்று (நேற்று) நள்ளிரவு 12 மணி முதல் திங்கட்கிழமை(நாளை) காலை 6 மணி வரை எந்தவித தளர்வும் இல்லாமல் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். மருத்துவசேவை, மருந்து கடைகள் மற்றும் பால் போன்ற மிக அத்தியாவசிய சேவை மட்டும் அனுமதிக்கப்படும். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் நுழைவுத்தேர்வுக்கு வருபவர்கள் ஹால் டிக்கெட்டை காட்டினால் அனுமதிக்கப்படுவார்கள். இது தவிர இதர நுழைவுத்தேர்வுக்கு வருபவர்களும் உரிய அத்தாட்சியை காட்டினால் அனுமதி வழங்கப்படும். பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
போலீஸ் கெடுபிடி
முழு ஊரடங்கையொட்டி போலீசார் கெடுபிடி பொதுமக்களிடம் அதிகமாக காணப்பட்டது. பத்திரிக்கை விற்பனை போன்ற அத்தியாவசிய சேவையை கூட சில இடங்களில் அதிகாரிகள் தடுத்தனர். கீழ்மட்ட அதிகாரிகளுக்கு அத்தியாவசிய சேவை எது என்பது பற்றி உயர் அதிகாரிகள் சரியான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
சென்னையில் இருந்து செல்பவர்களை வெறுப்பு உணர்வுடன் அண்டை மாவட்ட அதிகாரிகள் பார்க்கும் நிலை சில இடங்களில் கண்கூடாக தெரிந்தது. பொதுமக்களின் கட்டுப்பாடு இந்த முறை சிறப்பாகவே உள்ளது. போலீஸ்துறையில் பாதிப்பு அதிகம் இருப்பதால், அவர்கள் அந்த வெறுப்பை பொதுமக்களிடம் காட்டும் நிலை சில இடங்களில் காணப்பட்டது.
Related Tags :
Next Story