தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியவில்லை எனது நிலை யாருக்கும் வரக் கூடாது; வைரஸ் தொற்றில் இருந்து விலகி இருங்கள் -மகன் உருக்கமான வேண்டுகோள்


தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியவில்லை எனது நிலை யாருக்கும் வரக் கூடாது; வைரஸ் தொற்றில் இருந்து விலகி இருங்கள் -மகன் உருக்கமான வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 Jun 2020 5:23 AM IST (Updated: 21 Jun 2020 5:23 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு பலியான பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத மகன், எனது நிலை யாருக்கும் வரக் கூடாது என்றும், வைரஸ் தொற்றில் இருந்து விலகி இருங்கள் எனவும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா தனாயகனபுரா கிராமத்தை சேர்ந்தவர் 72 வயது மூதாட்டி. இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்த நிலையில் மூதாட்டி சிவமொக்காவில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு சென்றார். 6 மாதங்களாக அங்கு அவர் தங்கியிருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வீட்டுக்கு வந்துள்ளார். அவருக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது.

உடனே அவர் அஜ்ஜாம்புரா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அவர் சிக்கமகளூரு மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 18-ந்தேதி அவர் உயிரிழந்தார். மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதை தொடர்ந்து அவரது 52 வயது மகனும் அஜ்ஜாம்புரா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

உருக்கமான பேச்சு

இந்த நிலையில் கொரோனாவுக்கு பலியான மூதாட்டியின் மகன், சமூகவலைத்தளத்தில் ஒரு உருக்கமான வீடியோவை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி அனைவரின் நெஞ்சையும் கலங்க செய்கிறது. அந்த வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது:-

எனது அம்மா கொரோனா பாதித்து உயிரிழந்து விட்டார். அவருக்கு ஒரு மகனாக இருந்து செய்ய வேண்டிய இறுதிச்சடங்குகளை செய்ய முடியாத நிலைக்கு நான் தள்ளப்பட்டு உள்ளேன். கொரோனா பாதிப்பு இருப்பதால் நானும் அஜ்ஜாம்புரா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறேன். 6 மாதங்களாக எனது அம்மா எனது சகோதரி வீட்டில் தங்கியிருந்தார்.

சமீபத்தில் தான் அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை அஜ்ஜாம்புரா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அங்கு எனது தாய்க்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து எனது தாய், சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்து விட்டார். கொரோனா பாதித்த தாயுடன் இருந்த என்னையும் அதிகாரிகள் அஜ்ஜாம்புரா அரசு ஆஸ்பத்திரியில் தனிமை வார்டில் தங்க வைத்தனர். இதனால் எனது தாயின் முகத்தை கடைசியாக பார்க்க முடியவில்லை. அவரது உடலுக்கும் இறுதிச்சடங்கு செய்ய முடியாத நிலை எனக்கு ஏற்பட்டு விட்டது. எனக்கு ஏற்பட்ட இந்த நிலை யாருக்கும் வரக் கூடாது.

கொரோனாவிடம் இருந்து விலகி இருங்கள்

எனது அம்மாவுக்கு எப்படி கொரோனா தொற்று வந்தது என்பது தெரியவில்லை. எனவே கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு வழிகாட்டுதல்களான முகக்கவசம் அணியுங்கள். அடிக்கடி கிருமிநாசினி மூலம் கைகளை கழுவுங்கள். சமூக இடைவெளியை அனைவரும் கடைப்பிடியுங்கள். கொரோனாவில் இருந்து அனைவரும் விலகி இருங்கள். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

இவ்வாறு அவர் கண்ணீரும், கம்பலையுமாக பேசியுள்ளார்.

Next Story