வெளியூர்களில் இருந்து மாவட்டத்திற்கு அனுமதியின்றி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் ராமன் எச்சரிக்கை


வெளியூர்களில் இருந்து மாவட்டத்திற்கு அனுமதியின்றி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் ராமன் எச்சரிக்கை
x

வெளியூர்களில் இருந்து சேலம் மாவட்டத்திற்குள் அனுமதி இல்லாமல் வருபவர்கள் மீதும், அவர்களுக்கு உதவி புரிபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தின் எல்லா பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு வரும் பொதுமக்களையும், அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதோடு அவர்களே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து உரிய அனுமதியின்றி சேலம் மாவட்டத்திற்கு வரும் நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூலம் மேலும் பல நபர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இவர்கள் உரிய அனுமதியின்றி வருவதால் அவர்களை கண்டறிந்து உரிய பரிசோதனை செய்வதற்கு இயலாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்திற்கு உரிய அனுமதியின்றி வரும் நபர்களை தங்க வைக்கின்ற நபர்களில் குடும்பத்தினருக்கும் இந்நோய் தொற்று ஏற்பட்டு விடுகிறது. எனவே இதை தவிர்த்திட பொதுமக்கள் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பிற மாவட்டங்களிலிருந்து உரிய அனுமதியின்றி வரும் நபர்களை கண்டறிந்தால் உடனடியாக 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது சுகாதாரப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு உரிய தகவல் தெரிவிக்காமல் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து உரிய அனுமதியின்றி சேலம் மாவட்டத்திற்கு வரும் நபர்கள் மீதும், அவர்களை தங்க வைப்பவர்கள் மீதும் காவல்துறையின் மூலம் கடும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருப்பூர் பொறியியல் கல்லூரி நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனைமுகாமை கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.

Next Story