கரூரில், மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு - பொதுமக்கள் அச்சம்


கரூரில், மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு - பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 21 Jun 2020 12:38 PM IST (Updated: 21 Jun 2020 12:38 PM IST)
t-max-icont-min-icon

கரூரில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கரூர், 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டத்தைச்சேர்ந்த 3 பேர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 பேருடன் என மொத்தம் 31 பேர் கரூர் சணப்பிரட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பூரணகுணம் அடைந்த 3 பேர் மற்றும் தொற்று உறுதி செய்யப்படாமல் கண்காணிப்பில் இருந்த 5 பேர் என மொத்தம் 8 பேர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் கரூர் வாய்க்கால் தெருவை சேர்ந்த 29 வயது ஆண், கரூர் சிலோன் காலனி இந்திரா நகரை சேர்ந்த 18 வயது பெண், அதே பகுதியில் 50 வயது பெண், பள்ளப்பட்டியை சேர்ந்த 60 வயது ஆண், தாந்தோணி அம்பானிநகரை சேர்ந்த 21 வயது ஆண் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறையினர் நேற்று அறிவித்தனர்.

இதனால் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் மொத்தம் 33 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது ஆகும். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் வீடுகள், வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கிருந்து யாரும் வெளியில் செல்லாத வகையிலும், வெளிநபர்கள் யாரும் உள்ளே வராத வகையிலும் இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Next Story