ஈரோட்டில் 2½ வயது குழந்தைக்கு கொரோனா - கால்டாக்சியில் பயணித்த போது பரவியதா?


ஈரோட்டில் 2½ வயது குழந்தைக்கு கொரோனா - கால்டாக்சியில் பயணித்த போது பரவியதா?
x
தினத்தந்தி 21 Jun 2020 1:01 PM IST (Updated: 21 Jun 2020 1:01 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் 2½ வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கால்டாக்சியில் பயணித்தபோது வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஈரோடு, 

ஈரோடு சம்பத்நகர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் உறவினர் ஒருவர் கரூரில் இறந்து விட்டார். துக்கம் விசாரிப்பதற்காக ஈரோட்டில் இருந்து கால்டாக்சியில் அவர்கள் குடும்பத்துடன் கரூர் சென்றனர். அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்றனர். பின்னர் அதே கால் டாக்சியில் திரும்பவும் சம்பத்நகரில் உள்ள வீட்டுக்கு வந்தனர். அவர்களுடன் 2½ வயது ஆண் குழந்தையையும் எடுத்துக்கொண்டு சென்று இருந்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தையின் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் குழந்தையுடன் தாயும், தந்தையும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தனர். அவர்கள் 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் குழந்தைக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது. தாய், தந்தைக்கு பாதிப்பு கண்டறியப்படவில்லை. குழந்தையின் தந்தை பல் டாக்டராக உள்ளார். எனவே அவர் குழந்தையின் உடல் மாற்றத்தை வைத்தே உடனடியாக பரிசோதனை செய்ததால், குழந்தை தற்போது உரிய சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளது.

சம்பத்நகரில் குழந்தைக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதும், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் தலைமையில் செயற்பொறியாளர் விஜயகுமார், மாநகராட்சி நகர் நல அதிகாரி (பொறுப்பு) டாக்டர் அம்பிகா மற்றும் அதிகாரிகள் அந்த பகுதியை பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியையொட்டிய 2 வீதிகளில் அனைவருக்கும் உடனடியாக மாநகராட்சி சுகாதாரப்பணியாளர்கள் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட குழந்தை வசித்த குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள 6 வீடுகளில் வசித்து வருபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் கூறும்போது, ‘குழந்தை நல்ல நிலையில் இருக்கிறான். இந்த பகுதி முற்றிலும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படும். ஈரோடு மாநகர் பகுதியில் வளையக்காரவீதி, சம்பத்நகர் பகுதிகள் மட்டுமே தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ளது’ என்றார்.

ஈரோடு வளையக்கார வீதியில் முதலில் பாதிப்பு ஏற்பட்ட இளம்பெண்ணின் கணவர் கால் டாக்சி டிரைவர். அவர் காரில் சென்னையில் இருந்து வந்தவர்கள் பயணம் செய்து இருந்தனர். அதன் மூலம் அந்த பெண்ணுக்கு பரவியதுபோன்றே, இந்த 2½ வயது ஆண் குழந்தைக்கும் கால்டாக்சியில் பயணம் செய்ததன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே கால் டாக்சி, வாடகை கார்களை ஒவ்வொரு முறை பயணத்துக்கு பின்னரும் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story