5 நாள் விசாரணை முடிந்து ஜெயிலில் அடைப்பு - காசி, கூட்டாளியை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு


5 நாள் விசாரணை முடிந்து ஜெயிலில் அடைப்பு - காசி, கூட்டாளியை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு
x
தினத்தந்தி 21 Jun 2020 1:09 PM IST (Updated: 21 Jun 2020 1:09 PM IST)
t-max-icont-min-icon

5 நாள் போலீஸ் காவல் முடிவடைந்து ஜெயிலில் அடைக்கப்பட்ட காசி, அவரது கூட்டாளியை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில், கோட்டார் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி (வயது 26). இவர் சமூக வலைதளங்கள் மூலம் சென்னை பெண் டாக்டர், நாகர்கோவில் பெண் என்ஜினீயர் உள்பட 5 பெண்களிடம் நெருங்கிப்பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக நாகர்கோவில் போலீஸ் நிலையங்களில் வழக்குப் பதிவானது. மேலும் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காசி மீது ஒரு போக்சோ வழக்கும் பதிவானது. பாலியல் புகார்கள் தொடர்ந்து வந்ததையடுத்து காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

மேலும் இதில் தொடர்புடைய காசியின் கூட்டாளி நாகர்கோவிலை சேர்ந்த டேசன் ஜினோவை போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டிலுள்ள மற்றொரு கூட்டாளி கவுதம் என்பவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காசி மீது பதிவான பாலியல், கந்துவட்டி, போக்சோ உள்ளிட்ட 6 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சாந்தி 6 வழக்குகளை பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தார். இதற்காக காசி மற்றும் அவரது கூட்டாளி டேசன் ஜினோவை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் காவல் நேற்று முன்தினம் முடிவடைந்ததை தொடர்ந்து, இரவு நீதிபதி வீட்டில் காசி மற்றும் அவரது கூட்டாளி டேசன் ஜினோவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரும் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக 5 நாள் காவலில் காசி மற்றும் டேசன் ஜினோவை பல்வேறு இடங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காசியின் வீட்டிற்கு நேரில் சென்று சோதனை நடத்தினர். பின்னர் காசியின் பெற்றோரிடம் சுமார் 3 மணிநேரம் வரை விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே காசியின் வழக்கில் 2 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் காசி மற்றும் அவரது கூட்டாளி களுக்கு உதவியதாக மேலும் 5 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட உள்ளனர்.

இதற்கு போதுமான ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு சைபர் கிரைம் போலீசார் தற்போது உதவி செய்து வருகின்றனர். காசி பயன்படுத்திய சமூக வலைதளங்களில் இருக்கும் பெயர் பட்டியலை வைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போதுமான ஆதாரங்கள் திரட்டிய பின்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து காசி மற்றும் அவரது கூட்டாளி டேசன் ஜினோவை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Next Story