அரசின் நடவடிக்கைக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் கொரோனா பரவலை தடுக்க இன்று முக்கிய முடிவு - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


அரசின் நடவடிக்கைக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் கொரோனா பரவலை தடுக்க இன்று முக்கிய முடிவு - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 21 Jun 2020 8:13 AM GMT (Updated: 21 Jun 2020 8:13 AM GMT)

புதுவையில் கொரோனா பரவுவதை தடுக்க இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. பாதிப்பாக இருந்தாலும் அரசின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபை வளாகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி, 

புதுவையில் நேற்று அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் சுமார் 260-க்கு மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 52 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. முக கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணி செய்துவரும் 37 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் சென்னைக்கு சென்று வந்ததால் அவர் மூலம் 14 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வெளியில் இருந்து வருபவர்கள் புதுவையில் கொரோனாவை பரப்புகின்றனர்.

இதனால் அரசு சார்பில் மாநில எல்லையில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கு முன்பாகவே பலர் சென்னையில் இருந்து புதுவைக்குள் நுழைந்துள்ளனர். அவர்களை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு மாநில நிர்வாகத்திற்கு உண்டு.

வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் சிலர் உரிய அனுமதி பெறாமல் வீட்டுக்கு சென்று விடுகிறார்கள். அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் புதுவை மாநிலத்தில் கொரோனாவை தடுத்து நிறுத்த முடியாது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் யாராவது வெளிமாநிலங்களில் இருந்து வந்தால் உடனடியாக காவல்துறைக்கும் வருவாய்த்துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் தேவையில்லாமல் புதுவைக்கு வருவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் கைகளை தினமும் 8 முறை சோப்பு போட்டு கழுவ வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்தால் தொற்று பரவ வாய்ப்பு குறைவு.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய அரசுக்கு ரூ.4,500 செலவு ஆகிறது. தேவையான உபகரணங்கள் வாங்க முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து பணம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே கடைகள் திறக்கப்படுகின்றன. வேலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட சில பகுதிகளில் வாரத்தில் 3 நாட்கள் கடைகளை திறக்கின்றனர்.

புதுவையில் கடை உரிமையாளர்களை அழைத்துப் பேசியுள்ளோம். அப்போது அவர்கள் நேரத்தை குறைக்க கூடாது என்று கூறுகின்றனர். அதே நேரத்தில் மக்களின் உயிர் முக்கியம். அதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் கடை உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து அரசுக்கு ஒத்துழைக்கின்றனர். இதேபோல் புதுவை மாநிலத்திலும் கடை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போதுதான் நாம் ஒருங்கிணைந்து கொரோனாவை விரட்ட முடியும்.

புதுவையில் ஒரே நாளில் 52 பேருக்கு தொற்று பரவி உள்ளது என்றால் அது பெரிய ஆபத்து. அரசு முனைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை கூட்டி உள்ளேன். இதில் நானும், அமைச்சர்களும், தலைமைச்செயலர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து பேசி கொரோனா பரவாமல் இருக்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளோம். அவை கடுமையாக இருக்கும்.

மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே நாம் எடுக்கும் முடிவு சிலருக்கு பாதிப்பாக இருந்தாலும், அனைவரும் இதற்கு கட்டுப்பட வேண்டும். கொரோனா வேகமாக பரவும் இந்த நேரத்தில் மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடற்கரையை நடைபயிற்சிக்காக திறந்தோம். அங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக ஒன்று கூடுகின்றனர். இதை ஏற்க முடியாது.

பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து அதற்கான கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்த கோப்பு உள்துறை அமைச்சகத்திற்கு வந்துள்ளது. அங்கிருந்து அனுமதி கிடைத்தால் இந்த மாத இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story