பூந்தமல்லி துணை தாசில்தாருக்கு கொரோனா உறுதி
பூந்தமல்லி துணை தாசில்தாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பூந்தமல்லி,
பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றும் 44 வயதான திருவள்ளூரை சேர்ந்த துணை தாசில்தாருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் ஏற்பட்டது. அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது. உடனடியாக அவர், பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரது குடும்பத்தினரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்படஉள்ளது. அவர் பணியாற்றி வந்த பூந்தமல்லி தாசில்தார் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தாசில்தார் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு குன்றத்தூர் பெண் தாசில்தார் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்பெக்டருக்கு கொரோனா
சென்னையை அடுத்த பழவந்தாங்கல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக ஆலந்தூரில் உள்ள மருத்துவ முகாமில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் அனுமதிக்கப்பட்டார்.
போரூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 28 வயது சப்-இன்ஸ்பெக்டரும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவரது சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பூந்தமல்லியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று காலை முதல் மதியம் வரை அவர் பணியில் இருந்தார் என்பதால் அவருடன் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கொரொனா பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்
கொரோனா ஊரடங்கு உத்தரவால் பல்வேறு நாடுகளில் சிக்கி தவித்த 12 ஆயிரத்து 259 பேர் சிறப்பு விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் ஏற்கனவே 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இந்தநிலையில் முகாமில் தங்கி இருந்தவர்களில் மலேசியாவில் இருந்து வந்த 3 பேருக்கும், சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அதேபோல் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு பல்வேறு நகரங்களில் இருந்து வந்த 44 ஆயிரத்து 23 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story