இடமாற்றத்துக்கு பெயர்போனவர்: மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளியேறிய கமிஷனர் துக்காராம் முண்டே
நாக்பூர் மாநகராட்சி கூட்டத்தின் போது, காங்கிரஸ் கவுன்சிலர் தனது பெயர் குறித்து விமர்சித்ததால் கோபம் அடைந்த கமிஷனர் துக்காராம் முண்டே கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
மும்பை,
மராட்டியத்தில் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி துக்காராம் முண்டே. நேர்மையுடன் செயல்படுவதால் இவருக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட பல மக்கள் பிரதிநிதிகளுக்கும் எப்போதும் ஒத்துப்போவதே இல்லை.
இதனால் துக்கராம் முண்டே கிட்டத்தட்ட ஆண்டுதோறும் பணியிட மாற்றத்துக்கு ஆளாகி வருகிறார். பணியிட மாற்றம் காரணமாக நவிமும்பை மாநகராட்சி கமிஷனர், புனே போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், மாநில திட்டமிடல் இணை செயலாளர், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் திட்ட இயக்குனர், நாசிக் மாநகராட்சி கமிஷனர் என பல்வேறு பதவிகளை வகித்த துக்காராம் முண்டே தற்போது பாரதீய ஜனதாவின் அதிகாரத்தில் உள்ள நாக்பூர் மாநகராட்சியில் கமிஷனராக உள்ளார்.
அங்கும் தனது அதிரடி நடவடிக்கைகளால் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பை சம்பாதித்து உள்ளார். அங்கு காங்கிரஸ் கவுன்சிலர் ஹரிஷ் குவால்பன்ஷி என்பவரது வார்டில் வேறொரு திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் துக்காராம் முண்டே கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அனுமதி அளித்து உள்ளார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் நடந்த மாநகராட்சி பொதுக்கூட்டத்தில் கவுன்சிலர் ஹரிஷ் குவால்பன்ஷி கேள்வி எழுப்பினார்.
வெளிநடப்பு
அப்போது மக்கள் மற்றும் தெர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு செவிசாய்க்காத ஒரு சர்வாதிகாரி போல துக்காராம் முண்டே நடந்து கொள்கிறார். அவர் மரியாதைக்குரிய துறவியின் (துக்காராம்) பெயரை வைத்திருப்பது பொருத்தமற்றது என்று விமர்சித்தார். காங்கிரஸ் கவுன்சிலரின் இந்த பேச்சுக்கு கமிஷனர் துக்காராம் முண்டே ஆவேசம் அடைந்தார். கடும் ஆட்சேபனை தெரிவித்து அவர் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். மேயர் சந்தீப் ஜோஷி கேட்டுக் கொண்ட பின்னரும் அவர் திரும்பி வர மறுத்து விட்டார்.
இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு உண்டானது. இந்த நிலையில், சிவசேனா கவுன்சிலர்களான மங்லா கவ்ரே மற்றும் நிதின் சாதவ்னே ஆகியோரும் துக்காராம் முண்டேக்கு எதிராக பேசினார்கள். பின்னர் காங்கிரஸ் கவுன்சிலர் சஞ்சய் மகால்கர் கமிஷனர் துக்காராம் முண்டேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார். ஆனால் அதை மேயர் ஜோஷி நிராகரித்தார். இதற்கிடையே காங்கிரஸ் கவுன்சிலர் பண்டி ஷெல்கே என்பவர் துக்காராம் முண்டேவுக்கு ஆதரவு தெரிவித்து மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே பதாகையுடன் நின்று கொண்டிருந்தார். அடிக்கடி இடமாற்றத்துக்கு ஆளாகும் துக்காராம் முண்டே நாக்பூர் மாநகராட்சி கமிஷனர் பதவியிலும் எத்தனை நாட்கள் நீடிப்பார் என்ற பரபரப்பு ஏற்பட்டுஉள்ளது.
Related Tags :
Next Story