வெள்ளப்பிரச்சினை குறித்து கர்நாடக முதல்-மந்திரியை உத்தவ் தாக்கரே சந்தித்து பேசுவார் - மந்திரி ஜெயந்த் பாட்டீல் பேட்டி
வெள்ள பிரச்சினை குறித்து கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சந்தித்து பேசுவார் என மந்திரி ஜெயந்த் பாட்டீல் கூறினார்.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த ஆண்டு மழைக்காலத்தின் போது கர்நாடக அணைகள் திறக்கப்பட்டதன் காரணமாக கோலாப்பூர், சாங்கிலி மற்றும் சத்தாரா மாவட்டங்களில் பெரும்வெள்ளம் ஏற்பட்டது. இதனால் இந்த 3 மாவட்டங்களும் கடும் சேதத்தை சந்தித்தன. இந்த ஆண்டு தற்போது பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கடந்த ஆண்டை போல வெள்ள பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருக்க மராட்டிய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக நேற்று 3 மாவட்டங்களை சேர்ந்த 7 மந்திரிகள், 4 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருடன் மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி ஜெயந்த் பாட்டீல் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, முந்தைய பாரதீய ஜனதா தலைமையிலான மாநில அரசால் அமைக்கப்பட்ட நந்தகுமார் வாட்னேர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தவும், வெள்ளபாதிப்பை தடுக்க மராட்டியம்- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டார்.
முதல்-மந்திரிகள் பேசுவார்கள்
இந்த கூட்டத்திற்கு பிறகு மந்திரி ஜெயந்த் பாட்டீல் கூறியதாவது:-
கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா மாவட்டங்களில் மழை வெள்ளபாதிப்பை தடுக்க அடுத்த வாரம் கர்நாடக நீர்ப்பானத்துறை மந்திரி ரமேஷ் ஜர்கிஹோலியை சந்தித்து பேச இருக்கிறேன். பின்னர் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா இடையே முதல்-மந்திரி அளவிலான கூட்டம் கோலாப்பூர் அல்லது கர்நாடக மாநிலம் பெல்காவில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story