“பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் பணியாற்றுங்கள்” பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் அறிவுரை


“பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் பணியாற்றுங்கள்” பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் அறிவுரை
x
தினத்தந்தி 22 Jun 2020 5:30 AM IST (Updated: 22 Jun 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

போலீசாருக்கு கொரோனா பரவுவதை தடுக்க வழிமுறைகளை கூறியுள்ள பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ், “பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் பணியாற்றுங்கள்” என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் போலீசாருக்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மேலும் 3 போலீசார் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து, போலீசாருக்கு கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா பரவுவதை தடுக்க போலீசார் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் அறிவுரை வழங்கி உள்ளார். இதுதொடர்பாக பாஸ்கர்ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தைரியமாக இருக்க வேண்டும்

“எந்த பிரச்சினை வந்தாலும் போலீசார் தைரியமாக இருக்க வேண்டும், குழப்பத்தில் சிக்கி கொள்ள கூடாது, உங்களுடன் அரசும், போலீஸ் துறையும் இருக்கிறது. உடல் நலக்குறைவு இருந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக விடுமுறை அளிக்க வேண்டும். நகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலேயே இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும், அவர்கள் பெங்களூருவை விட்டு வெளியூருக்கு செல்ல கூடாது.

ஊர்க்காவல் படையில் இளைஞர்களை மட்டும் வேலையில் அமர்த்த வேண்டும். போலீஸ் நிலையம் முன்பாக கூடாரம் அமைத்து, புகார் அளிக்க வருபவர்களிடம் பேச வேண்டும், பொதுமக்கள், குற்றவாளிகளை எக்காரணத்தை கொண்டும் தொடக்கூடாது. ரோந்து வாகனங்களில் தேவையில்லாமல் சுத்த வேண்டாம், யாராவது புகார் அளித்தால் மட்டும் ரோந்து பணிக்கு செல்லுங்கள்.

நெருங்கி பழக வேண்டாம்

முக்கியமான வழக்குகளில் தொடர்புடையவர்களை மட்டும் கைது செய்யுங்கள், கைதாகும் நபர்களை போலீஸ் நிலையம் அழைத்து செல்வதற்கு முன்பு கொரோனா பரிசோதனை நடத்துங்கள். ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் கை, கால்களை கழுவவும், குடிக்கவும் கண்டிப்பாக வெந்நீர் பயன்படுத்த வேண்டும், முக கவசம், கையுறை, சானிடைசரை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

போலீசார் பயன்படுத்தும் வாகனங்களை தினமும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். பொதுமக்களிடம் நெருங்கி பழக வேண்டாம். முன் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் பணியாற்றுங்கள்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story