மின்னல் வேகத்தில் நோய்த்தொற்று பரவல்: ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா - விழுப்புரத்தில் ஆசிரியர் உள்பட 4 பேர் பலி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் நோய்த்தொற்று பரவலின் வேகம் குறையவில்லை. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
திருக்கோவிலூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 366 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், அரசு டாக்டர் ஒருவரும் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் பலரது உமிழ்நீர் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதில் சிலரது பரிசோதனை முடிவு நேற்று வெளிவந்தது. கள்ளக்குறிச்சி நகரத்தை சேர்ந்த 11 பேர் உள்பட 21 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 387 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வைரஸ் தொற்று நோய்க்கு தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனும் பாதிக்கப்பட்டுள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன்(வயது 48). தியாகதுருகம் ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும் உள்ளார். இவர் தனது தொகுதி முழுவதும் சென்று கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
சமீபத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தனது குடும்பத்துடன் சென்றிருந்தார். அதன்பிறகு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வின் மனைவி இளமதி(39), மகள் மகன்யா(8) ஆகியோருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. கொரோனாவுக்கான அறிகுறி இருந்ததால் இருவரது உமிழ்நீரும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கடந்த 11-ந் தேதி இருவரும் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை கண்காணிக்க வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது தாயாரும், தியாகதுருகம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான காந்திமதி கண்ணனும் மருத்துவமனையிலேயே தங்கினர்.
இந்த நிலையில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வுக்கும், அவரது தாயாருக்கும் நேற்று முன்தினம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. சளி மற்றும் இருமல் இருந்ததால் உடனடியாக இருவருக்கும் உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு நேற்று வந்தது. இதில் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதனை தொடர்ந்து இருவரும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்-யார்? என்ற விவரங்களை சுகாதாரத்துறையினர் சேகரித்து, அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சாத்தனூரில் உள்ள வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வின் வீடு மற்றும் அந்த தெரு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரஸ் தொற்றால் 551 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஏற்கனவே 9 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 383 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பி உள்ளனர். மற்றவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, விழுப்புரத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை, விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று சிலரது உமிழ்நீர் பரிசோதனை முடிவு வந்தது. இதில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 581 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் உள்பட 4 பேர் நேற்று ஒரே நாளில் பலியானார்கள். அது பற்றிய விவரம் வருமாறு:-
வானூர் அருகே உள்ள தென்சிறுவலூரை சேர்ந்த 45 வயதுடையவர், வேப்பேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரிடம் இருந்து உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. உடனே அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த ஆசிரியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவர், விழுப்புரம் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ராஜேந்திரனுக்கு உதவியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டாச்சிபுரத்தை சேர்ந்த 50 வயதுடைய பால் வியாபாரி ஒருவரும், வழுதரெட்டியை சேர்ந்த 70 வயது முதியவரும், அரியலூர் திருக்கையை சேர்ந்த 60 வயது மூதாட்டியும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் 3 பேரும் நேற்று காலையில் அடுத்தடுத்து பலியானார்கள்.
இதையடுத்து 4 பேரின் உடல்களும், விழுப்புரம் கே.கே.ரோட்டில் உள்ள எரிவாயு தகன மேடைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ஆசிரியர் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு அடுத்தடுத்து பலியான சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story