கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: வடமாநில தொழிலாளர்கள் 6,267 பேர் சொந்த ஊருக்கு சென்றனர் - தொழிற்சாலை உரிமையாளர்கள் கலக்கம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 6,267 பேர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதனால் கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.
நாமக்கல்,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழிற்சாலைகள் இயங்க தொடங்கினாலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.
மத்திய அரசும் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் அனுப்பி வைக்க உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அரசு செலவில் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் இங்கு பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் கோழிப்பண்ணைகளில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த மாவட்டத்தில் இருந்து இதுவரை 6,267 வடமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து நேற்று வரை அனுப்பி வைக்கப்பட்ட வட மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை வருமாறு:-
ஆந்திரா-16, அசாம்-37, பீகார்-2,080, சத்தீஷ்கர்-119, ஒடிசா-1,606, ஜார்க்கண்ட்-554, மத்திய பிரதேசம்-62, டெல்லி-15, பஞ்சாப்-14, ஜம்மு காஷ்மீர்-5, மராட்டியம்-180, மணிப்பூர்-55, ராஜஸ்தான்-20, உத்தரபிரதேசம்-1,109, மேற்கு வங்காளம்-395.
கோழிப்பண்ணைகளில் சுமார் 50 சதவீதம் வரை வடமாநில தொழிலாளர்களே பணியாற்றி வந்தனர். இவர்கள் கோழிப்பண்ணை பராமரிப்பு, முட்டை சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி விட்டதால் பண்ணையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இதேபோல் தொழிற்சாலை உரிமையாளர்களும் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய வட மாநில தொழிலாளர்கள் எப்போது திரும்பி வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story