ஊரடங்கு காலத்தில் ‘ஏழைகளுக்கு உணவு பாதுகாப்பு அளிப்பதே அரசின் இலக்கு’ - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு


ஊரடங்கு காலத்தில் ‘ஏழைகளுக்கு உணவு பாதுகாப்பு அளிப்பதே அரசின் இலக்கு’ - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
x
தினத்தந்தி 22 Jun 2020 3:30 AM IST (Updated: 22 Jun 2020 10:04 AM IST)
t-max-icont-min-icon

‘ஊரடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உணவு பாதுகாப்பு அளிப்பதே அரசின் இலக்கு‘ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல், 

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது சொந்த பொறுப்பில், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சம் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். அதன்படி திண்டுக்கல் லயன்தெரு, லட்சுமணபுரம், நாயக்கர்புதூர் உள்பட இடங் களில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு, நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி, துவரம் பருப்பு, கோதுமை மாவு, மைதா மாவு, சேமியா, உப்பு ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:-

உலக போரை விட, மிகக்கொடியதாக கொரோனா நோய் உள்ளது. இதனை கட்டுப்படுத்தி, மனித உயிரிழப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை பேரிடராக அறிவித்து ரூ.4,333 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் 2 கோடியே 1 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம், 35 லட்சத்துக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.

மேலும் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகம் மூலம் தினமும் 8 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இதுதவிர சமுதாய கூடங்களில் உணவு தயாரித்து, ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ரேஷன் கடைகளிலும் விலை யில்லாமல் பொருட்கள் வினி யோகம் செய்யப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு உணவு பாதுகாப்பு அளிப்பதையே தமிழக அரசு இலக்காக கொண்டு செயல்படுகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவின்பேரில் அ.தி.மு.க.வினர் தங்களது உயிரை பணயம் வைத்து நிவாரண பொருட் களை மக்களுக்கு வழங்குகின்றனர். அதன்படி திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியினரின் விமர்சனங்களை ஒதுக்கி விட்டு, மக்கள் பணிகளை முனைப்போடு நாங்கள் செய்து வருவது மனநிறைவு அளிக்கிறது.

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 17 நிறுவனங்களுடன் ரூ.15 ஆயிரம் கோடிக்கு தமிழக அரசு தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் 47 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கடந்த 4 ஆண்டுகளில் குடிமராமத்து திட்டத்தில் ரூ.1,433 கோடி ஒதுக்கி 6 ஆயிரத்து 277 ஏரிகளை தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் 4 ஆயிரத்து 565 ஏரிகள் தூர்வாரி முடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிற சலுகைகள், திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் கொரோனா பரவாமல் தடுக்க கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், துணை தலைவர் ராஜன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், நகர கூட்டுவு வங்கி தலைவர் வீரமார்பன், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, சேசு, மோகன், முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story