கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை - கலெக்டர் தகவல்


கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 Jun 2020 10:45 PM GMT (Updated: 22 Jun 2020 4:34 AM GMT)

கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர், உறவினர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்த நபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கையாளும் வழிமுறைகள் குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று உறுதியான நபரை உடனடியாக அரசு அல்லது சி.எம்.சி. மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் மட்டுமே அழைத்து செல்ல வேண்டும். கொரோனா பாதித்த நபரின் வீடு தனிமைப்படுத்தப்பட வேண்டும். அந்த வீட்டில் உள்ள மற்ற நபர்கள், பழகியவர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட வேண்டும். அந்த சோதனை முடிவுகள் வரும் வரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஒருதெருவில் உள்ள ஒரு வீட்டில் மட்டும் கொரோனா தொற்று உறுதியானால் அந்த வீடு மட்டுமே தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஒருதெருவில் பல நபர்களுக்கு பாதிப்பு இருந்தால் அந்த தெருவின் இருபுறமும் தடுப்புகள் அமைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபரின் வீடானது அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்திருந்தாலோ அல்லது ஒருபகுதி வாடகைக்கு விடப்பட்டிருந்தாலோ அந்த நபரை அருகேயுள்ள சிறப்பு தனிமைப்படுத்தும் மையத்துக்கு அழைத்து செல்ல வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நபரின் 2-ம் நிலை தொடர்பில் அதே தெருவில் உள்ள மளிகை கடைகள், காய்கறி கடைகள், அவரின் நண்பர்கள், உறவினர்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

சிறப்பு தனிமைப்படுத்தும் மையத்தில் சேர்க்கும் நபர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட வேண்டும். சிறப்பு மையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை ஒரே அறையில் தங்க வைக்கலாம். கைக்குழந்தையுடன் உள்ள பெண்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். பரிசோதனை முடிவில் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட வேண்டும். சிறப்பு மையத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் தெரு, அவருடைய வீட்டிற்கு தினமும் 5 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

அந்த தெருவில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, சளி, இருமல், காய்ச்சல் அறிகுறி காணப்படும் நபர்கள், 55 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட வேண்டும். மேலும் அந்த தெருவில் உள்ளவர்களுக்கு காலை, மாலையில் 5 நாட்களுக்கு நிலவேம்பு கசாயமும், சளி, இருமல் காணப்படும் நபர்களுக்கு 2 நாட்கள் கபசுர குடிநீரும் வழங்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தால் வழக்குப்பதிவு செய்யப்படுவார்கள். மேலும் அவர்கள் சிறப்பு தனிமைப்படுத்தும் மையத்துக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Next Story