கொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம் - கலெக்டர் வேண்டுகோள்


கொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம் - கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 22 Jun 2020 5:40 AM GMT (Updated: 22 Jun 2020 5:40 AM GMT)

கொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து கலெக்டர் கண்ணன் கூறியதாவது:-

விருதுநகர்,

வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு வருபவர்களை சிறப்பு முகாம்களில் தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா நோய் பரவல் ஏற்படுவதை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 9 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்படுபவர்கள் அதனை தண்டனையாக நினைக்க வேண்டியது இல்லை. அவர்கள் நலனுக்காகவும், குடும்பத்தினர் நலனுக்காகவும் அவர்களது ஊர் மக்கள் நலனுக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தனிமைப்படுத்தி தங்க வைக்கப்படும் முகாம்களில் தேவையான வசதிகள் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டநிர்வாகம் இதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறது. எனவே வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருவோரை மாவட்டத்தின் நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பலர் சோதனைசாவடிகளை தவிர்த்துவிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை தொடர்கிறது. இதனால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இந்த நடைமுறையினால் அவர்களது குடும்பத்தினருக்கும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவங்கள் நடந்துள்ளது.

எனவே கொரோனா பரவுவதை தடுக்க வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை தண்டனையாக கருதாமல் அவர்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன்.

மேலும் கிராம பகுதிகளிலும், நகர் பகுதிகளிலும் யாரேனும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்தால் அது பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மக்கள் ஒத்துழைப்பு தந்தால் தான் நோய் பரவலை முற்றிலுமாக தடுக்க முடியும். எனவே மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story