கீரமங்கலம் அருகே, கல்லணை கால்வாயில் உடைப்பு; வயல்களில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் - 15 மணி நேர போராட்டத்திற்கு பின் சீரமைப்பு
கீரமங்கலம் அருகே கல்லணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, வயல்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 15 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உடைப்பு சீரமைக்கப்பட்டது.
கீரமங்கலம்,
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி நீரை திறந்து வைத்தார். இதையடுத்து 16-ந் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் கடைமடை பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்தடைந்தது. மேற்பனைக்காடு கிராமத்தில் விவசாயிகள் மலர், விதைகள் தூவி கற்பூரம் ஏற்றி வணங்கி தண்ணீரை வரவேற்றனர். நேற்று காலை நாகுடிக்கு தண்ணீர் குறைந்த அளவு சென்றுள்ளது. அங்கும் விவசாயிகள் தண்ணீரை வரவேற்றனர். தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து சுமார் 300 கன அடி வரை புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் புதுக்கோட்டை - தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வேம்பங்குடி கிழக்கு கிராமத்தில் உள்ள கல்லணை கால்வாய் கரையில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற கிராம மக்கள், விவசாயிகள் உடைப்பை சரி செய்யும்விதமாக தடுப்பு கட்டைகள் அமைத்து மணல் மூட்டைகள் அடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகளும் ஒப்பந்த ஊழியர்களுடன் வந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் தண்ணீர் வேகமாக வந்ததால் மேலும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சன்விடுதியில் தண்ணீரின் வரத்து அளவை குறைத்தனர். இருப்பினும் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தண்ணீர் சென்றது. சுமார் 50 பேருக்கு மேல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டநிலையில், மதியத்திற்கு பிறகு தடுப்புக்கட்டைகள் அமைத்து மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தொடங்கியபோது தடுப்புக்கட்டைகள் உடைந்து, தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதால் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனால் மீண்டும் தடுப்புகள் அமைக்கப்பட்டு மண், மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணும் கொண்டு வந்து கொட்டப்பட்டது. சீரமைப்பு பணிகளை பட்டுக்கோட்டை சப்-கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ், பேராவூரணி தாசில்தார் ஜெயலெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
காலை 6 மணி முதல் சீரமைப்பு பணி தொடங்கிய நிலையில், தொடர்ந்து 15 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உடைப்பு ஏற்பட்ட பகுதி சீரமைக்கப்பட்டு, கிராவல் மண் கொட்டப்பட்டது. அந்த பகுதியில் உள்ள வயல் அருகே ஏற்பட்ட உடைப்பில் இருந்து வெளியேறிய தண்ணீர் அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளில் பெருக்கெடுத்து ஓடி அருகில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் ஆண்டாகோட்டை ஏரி, பின்னவாசல் ஏரிகளில் நிரம்பியுள்ளது. ஆனால் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்த குட்டைக்கு தண்ணீர் செல்லவில்லை.
கல்லணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார். அங்கு நின்ற விவசாயிகள், உடைப்பு ஏற்பட்டதால் எள் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக கூறினார்கள். பின்னர் கலெக்டர் கூறுகையில், தண்ணீர் மற்ற கால்வாய்களில் மாற்றி விடப்பட்டது. அரசு நிதி பெற்று கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பயிர் சேதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வழக்கம் போல தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.
Related Tags :
Next Story