திருச்சி, கரூரில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலி - மேலும் 36 பேருக்கு தொற்று


திருச்சி, கரூரில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலி - மேலும் 36 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 22 Jun 2020 11:57 AM IST (Updated: 22 Jun 2020 11:57 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி, கரூரில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலியாகினர். மேலும், திருச்சியில் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

திருச்சி,

தமிழகத்தில், கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 36 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்கள் மாநகரில் வயலூர் ரோடு, பொன்மலைப்பட்டி, உறையூர் ஆகிய பகுதிகளையும், மணப்பாறை, புள்ளம்பாடி ஆகிய பகுதிகளையும் சேர்ந்தவர்கள் ஆவர். இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 266 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 70 வயது முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சி திருவெறும்பூர் காவேரிநகர் பகுதியை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதற்கிடையே திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 12 பேர் பூரண குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மணப்பாறையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புத்தாநத்தம் பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர், கிராம உதவியாளர் என 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ராயம்பட்டி, அணைப்பட்டி ஆகிய பகுதிகளிலும் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் 8 பேரும், ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கிராம உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பதால் கிராம நிர்வாக அலுவலகம் மூடப்பட்டது.

கரூர் வெங்கமேடு வி.வி.ஜி. நகரை சேர்ந்த 40 வயதுடைய ஓட்டல் தொழிலாளி கடந்த 19-ந்தேதி சென்னையில் இருந்து வந்தார். அவர் உடல் நிலை சரியில்லை எனக்கூறி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூச்சு திணறல் இருந்தது. இதனையடுத்து சளி மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதிக்கப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு நேற்று முன்தினம் இரவு மூச்சுதிணறல் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Next Story