கொரோனா தொற்றை மற்றவர்களுக்கு, கவன குறைவாக பரப்புபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை


கொரோனா தொற்றை மற்றவர்களுக்கு, கவன குறைவாக பரப்புபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Jun 2020 7:12 AM GMT (Updated: 22 Jun 2020 7:12 AM GMT)

கொரோனா தொற்றை மற்றவர்களுக்கு கவன குறைவாக பரப்புபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்திற்கு பிற மாநிலம், பிற மாவட்டங்களில் இருந்து வருகை தருபவர்களை எல்லை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கான டாக்டர்கள் மற்றும் ஆய்வக நுட்புனர்களை கொண்டு 24 மணி நேரமும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனைக்கான மாதிரி எடுக்கப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் விரைவாக வழங்கப்படுகிறது.

பரிசோதனை முடிவில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். தொற்று இல்லை எனில் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் கடைகள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணியுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

வீடுகளில் நடைபெறும் விஷேசங்களில் உறவினர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கவும், முடிந்தவரை வெளியூர் உறவினர்களை தவிர்த்து உள்ளூர் உறவினர்களை கொண்டு விஷேசங்களை நடத்திட வேண்டும். மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 9499933843, 9499933844 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. கிராம, நகர் பகுதிகளுக்கு சென்னை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலும் கொரோனா தொடர்புடைய அனைத்து விதமான புகார்கள் மற்றும் சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும். வெளியில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் கை, கால்களை 20 வினாடிகள் சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். அடிக்கடி கைகளால் முகத்தை தொடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் உமிழ்வதை தவிர்க்க வேண்டும்.

பயன்படுத்திய முககவசம் மற்றும் கையுறைகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியோர்கள், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் மிக கவனத்துடன் முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

மேலும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் நோய் உள்ளவர்களுக்கு 2 மாதத்திற்கான மாத்திரைகள் வீட்டிற்கு சென்று வழங்கப்படுகிறது. மாத்திரைகள் கிடைக்க பெறாதவர்கள் கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்தால் உடனே வீட்டிற்கு சென்று வழங்கப்படும்.

கைகுழந்தை மற்றும் கர்ப்பிணிகள் இருக்கும் வீட்டில் பிறந்தநாள் மற்றும் வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. சளி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் மாவட்ட கட்டுபாட்டு அறையை தொடர்புகொண்டு அருகில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்றை மற்றவர்களுக்கு கவனகுறைவாக பரப்புபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், தொற்றுநோய் சட்டத்தின்படி அபராதம் அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story