திருப்பூர் மாவட்டத்தில், மேலும் 4 பேருக்கு கொரோனா - சென்னையில் இருந்து வந்தவர்கள்
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சென்னையில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு வந்தவர்கள் ஆவார்கள்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெளியூரில் இருந்து திருப்பூர் வந்தவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 119 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-
திருச்சியை சேர்ந்த 25 வயது ஆண் சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த 17-ந் தேதி கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக ஈரோடு வந்துள்ளார். அங்கு அவருக்கு ஸ்வாப் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் காங்கேயத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது போல் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த 56 வயது பெண் தனது மகனுடன் ரெயில் மூலமாக கடந்த 17-ந் தேதி திருப்பூர் வந்தார். பின்னர் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். திருப்பூர் வந்ததும் அவருக்கு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை பாடி பகுதியை சேர்ந்த 44 வயது ஆண் சென்னையில் இருந்து பல்லடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வாடகை காரில் இ-பாஸ் பெற்று வந்துள்ளார். கடந்த 18-ந் தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 61 வயது ஆண் தனது மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் தனது காரில் சென்னையில் இருந்து திருப்பூருக்கு கடந்த 17-ந் தேதி வந்துள்ளார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருப்பூர் ஸ்டேன்ஸ் வீதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் 61 வயது ஆணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இவர்கள் 4 பேரும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதைத்தொடர்ந்து சென்னை சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிட்ட பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தில் 123 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story