காஞ்சீபுரத்தில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை - சத்து மாத்திரை வழங்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு


காஞ்சீபுரத்தில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை - சத்து மாத்திரை வழங்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Jun 2020 10:45 PM GMT (Updated: 22 Jun 2020 9:10 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பகுதிகளிலும், பொதுமக்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பகுதிகளில் சுகாதார பணிகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர், ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று வெப்ப பரிசோதனை செய்து சத்து மாத்திரைகள் வழங்கும் பணிகளை பார்வையிட்டார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று வரை 597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் 166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மேலும் 530 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், புதியதாக கொரோனா தொற்று ஏற்படும் நோயாளிகளுக்கு முன்னேற்பாடாக செவிலியர் பயிற்சிப்பள்ளியில் 100 படுக்கை வசதிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்தின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பில் தற்காலிகமாக 6 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது.

நோய் எதிர்ப்பு மாத்திரைகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 9 ஆயிரம் பேர் கொரோனா பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, காஞ்சீபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, நோய் எதிர்ப்பு மாத்திரைகளை முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் மீண்டும் 2வது முறையாக காஞ்சீபுரம் நகராட்சி பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று வெப்ப பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) ஜூவா, துணை இயக்குநர் (சுகாதாரம்) பழனி, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கல்பனா, காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி மற்றும் வருவாய்த்துறை தாசில்தார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story