திருவள்ளூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு எதிரொலி: ஆளில்லா குட்டி விமான கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு எதிரொலி: ஆளில்லா குட்டி விமான கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு
x
தினத்தந்தி 23 Jun 2020 4:15 AM IST (Updated: 23 Jun 2020 2:40 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு எதிரொலியாக நேற்று ஆளில்லா குட்டி விமான கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் நடமாட்டமின்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடின.

திருவள்ளூர்,

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா வைரசை முழுமையாக கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 19ந் தேதி முதல் 30ந் தேதி வரை முழுஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக திருவள்ளூர் மாவட்ட போலீசார், மாவட்டம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெறிச்சோடிய சாலைகள்

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், தேன்மொழி உள்ளிட்ட போலீசார் நேற்று சி.வி நாயுடு சாலை, ஜெ.என்.சாலை, ஆயில் மில் டோல்கேட் பகுதி, காக்களூர் சாலை போன்ற பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் போலீசார் அங்கு ஆளில்லா குட்டி விமான கேமராவை பறக்க விட்டு அதன் மூலம் பொதுமக்கள் யாரேனும் முழுஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிகிறார்களா என ஆய்வு மேற்கொண்டனர். திருவள்ளூர் மாவட்ட போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியதை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

Next Story