ஆண்டிமடம் அருகே தனிமைப்படுத்தப்படும் முகாமை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


ஆண்டிமடம் அருகே தனிமைப்படுத்தப்படும் முகாமை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Jun 2020 10:54 PM GMT (Updated: 22 Jun 2020 10:54 PM GMT)

ஆண்டிமடம் அருகே கொரோனா தடுப்பு சிறப்பு தனிமைப்படுத்தப்படும் முகாமை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆண்டிமடம்,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த சூனாபுரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு தனிமைப்படுத்தப்படும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டிமடம் போலீசார் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி இந்த மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதில் 5 பெண்கள் உள்பட 37 பேரும், அருகே உள்ள ஆண்டிமடம் அரசு பள்ளியில் 5 பெண்கள் உள்பட 17 பேரும் தங்க வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளிவந்தன. அதில் சூரக்குழி கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும், கோவில்வாழ்க்கை கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது என்று கூறப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள முகாம் எதிரே உள்ள தெருவை சேர்ந்த பொதுமக்கள் தடுப்பு முகாமில் உள்ளவர்கள் முகாமை விட்டு வெளியே வந்து திரும்ப முகாமிற்கு செல்லும் நிலை உள்ளதாகவும்.

சாலை மறியல்

முகாமில் உள்ளவர்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றும் ஆகவே சிறப்பு தனிமைப்படுத்தப்படும் முகாமை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறி நேற்று முன்தினம் இரவு ஆண்டிமடம்- ஸ்ரீமுஷ்ணம் சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாம் எதிரே மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் தாசில்தார் தேன்மொழி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முஹம்மது இத்ரீஸ், மலைச்சாமி, சந்திரகலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தாசில்தார் தேன்மொழி பொதுமக்களிடமிருந்து மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story