கண்காணிப்பு பணியில் புதிதாக 4,500 பேர் நியமனம் - மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல்


கண்காணிப்பு பணியில் புதிதாக 4,500 பேர் நியமனம் - மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல்
x
தினத்தந்தி 23 Jun 2020 4:45 AM IST (Updated: 23 Jun 2020 4:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சியில் 1 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இப்பகுதிகளை கண்காணிக்க புதிதாக 4 ஆயிரத்து 500 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, 

சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுக்கவும் அவர்களை கண்காணிக்கவும், இளைஞர்கள், இளம்பெண்கள் என 4 ஆயிரத்து 500 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மாநகராட்சியின் 200 வார்டுகளில், மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியில் 5 தெருக்களுக்கு ஒருவரும், மக்கள் தொகை குறைவான பகுதிகளில் 15 தெருக்களுக்கு ஒருவரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வாரமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

600 இடங்களுக்கு சீல்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு இடங்களில் 17 ஆயிரத்து 500 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் 12 ஆயிரம் படுக்கை வசதிகள் டாக்டர்களுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது 3 ஆயிரம் பேர்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 12 நாள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் பல நன்மைகள் கிடைக்கும். இந்த ஊரடங்கின் முடிவில் பாதிக்கபடுகிறவர்களின் எண்ணிக்கை குறையும். வரும் 4 அல்லது 5 நாட்களில் இது தெரியும்.

சென்னையில் உள்ள 32 ஆயிரம் தெருக்களில், 7 ஆயிரத்து 500 தெருக்களில்தான் கொரோனா தொற்று இருக்கிறது. கடந்த 45 நாட்களுக்குள், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து தொற்று பரப்பப்படவில்லை. தொற்றை தடுக்க விதிமுறைகளை கடைப்பிடிக்காத 600-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story