திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு காரில் கடத்தப்பட்ட 19 கஞ்சா பண்டல்கள்- ரூ.90 ஆயிரம் பறிமுதல்


திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு காரில் கடத்தப்பட்ட 19 கஞ்சா பண்டல்கள்- ரூ.90 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Jun 2020 11:23 PM GMT (Updated: 22 Jun 2020 11:23 PM GMT)

திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 19 கஞ்சா பண்டல்கள், ரூ.90 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்து, சிக்கிய ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

திருச்சியில் இருந்து ஒரு காரில் ஹெராயின் கடத்திச்செல்லப்படுவதாகவும், அந்த காரின் பதிவெண் மற்றும் மாடல் குறித்தும் புதுக்கோட்டை போலீசாருக்கு நேற்று மதியம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூர் பகுதியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் புதுக்கோட்டை நகர உட்கோட்ட பகுதியில் டவுன், கணேஷ்நகர் மற்றும் திருக்கோகர்ணம் போலீசார், அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் புதுக்கோட்டை டவுன் பகுதியில் திலகர் திடல் அருகே ஒரு மண்டபத்தின் முன்பு மரத்தடியில் சந்தேகப்படும்படி ஒரு கார் நின்றது. அந்த காரின் பதிவெண் பலகை சற்று தொங்கியபடி காணப்பட்டது. அதன் அருகே சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதை கவனித்த போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து, காரை சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் ‘சீல்’ வைக்கப்பட்ட பண்டல்கள் இருந்தன. இது பற்றி அந்த நபரிடம், போலீசார் விசாரித்தனர்.

19 கஞ்சா பண்டல்கள்

விசாரணையில், காரில் கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேலும் அவரிடம் கத்தை, கத்தையாக பணம் இருந்தது. இதையடுத்து காரில் இருந்த கஞ்சா பண்டல்களையும், அவரிடம் இருந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து, திருச்சி போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்து, வரவழைத்தனர். அவர்களிடம் பிடிபட்ட கார், கஞ்சா பண்டல்கள், பணம் மற்றும் அந்த நபரை ஒப்படைத்தனர். அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பண்டல்கள் மொத்தம் 19 எண்ணிக்கையில் இருந்ததாகவும், அந்த நபரிடம் இருந்து மொத்தம் ரூ.90 ஆயிரம் கைப்பற்றப்பட்டதாகவும், ஒரு பண்டலில் சுமார் 10 கிலோ முதல் 15 கிலோ வரை கஞ்சா இருப்பது விசாரணையில் தெரியவந்ததாகவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் புதுக்கோட்டை போலீசார் தெரிவித்தனர்.

மேலும் 2 கார்களில்...

இதற்கிடையே மேலும் 2 கார்களில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாகவும், அந்த கார்களை பிடிக்கும்படியும் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த கார்களை பிடிக்கும் பணியில் நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரிடம் சிக்கிய நபர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரிடம் கேட்டபோது, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக மட்டும் தெரிவித்தனர்.

Next Story