புதுவை மாநில எல்லையில் கட்டுப்பாடு எதுவும் இல்லாத சேதராப்பட்டு- மயிலம் சாலை தாராளமாக நடமாடும் பொதுமக்கள்


புதுவை மாநில எல்லையில் கட்டுப்பாடு எதுவும் இல்லாத சேதராப்பட்டு- மயிலம் சாலை தாராளமாக நடமாடும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 23 Jun 2020 4:20 AM GMT (Updated: 23 Jun 2020 4:20 AM GMT)

புதுவை மாநில எல்லையான சேதராப்பட்டு-மயிலம் சாலையில் இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் தாராளமாக சென்று வருகின்றனர்.

காலாப்பட்டு,

கொரோனா அச்சுறுத்தலையொட்டி வெளிமாநிலங்களில் இருந்து வருவோரை தடுக்க புதுவை மாநில எல்லைகள் அதிரடியாக மூடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தமிழக பகுதியில் இருந்து புதுவைக்கு வரும் 80-க்கும் மேற்பட்ட குறுக்கு சாலைகளும் சீல் வைக்கப்பட்டன. மருத்துவம், அத்தியாவசியப் பணிகளுக்காக வரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தன.

இந்தநிலையில் 5-வது கட்ட ஊரடங்கின்போது பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதையொட்டி புதுவையில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து தற்போது 400-ஐ நெருங்கியுள்ளது.

சென்னையில் முழு ஊரடங்கு அறிவித்த நிலையில் அங்கிருந்து ரகசியமாக வந்தவர்களால் தான் தொற்று பரவுவதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். இதையடுத்து புதுவை மாநில எல்லைகளான கோரிமேடு, முள்ளோடை, மதகடிப்பட்டு, கனகசெட்டிக்குளம் ஆகிய நுழைவாயில்களில் கெடுபிடி காட்டப்பட்டது.

தளர்ந்த கெடுபிடி

இதனால் கடலூர், விழுப்புரம் மற்றும்கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்த தமிழக வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மருத்துவ சிகிச்சைக்கான உரிய ஆவணங்களுடன் வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த கெடுபிடிகள் அடுத்த சில நாட்களில் ஓய்ந்து தளர்ந்து போனது. அதாவது கடலூர், விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் புதுவையில் வேலை செய்வதற்கான அடையாள அட்டை மற்றும் இங்குள்ள ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்து எளிதாக வந்து செல்கின்றனர்.

கண்காணிப்பு இல்லை

புதுச்சேரி- சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கனகசெட்டிகுளம், புதுச்சேரி - மயிலம் சாலையில் சேதராப்பட்டு ஆகிய எல்லைகளில் எந்த கெடுபிடியும் கண்காணிப்பும் இல்லை. தடுப்புகள் கூட அங்கு சரிவர அமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் இந்த வழியாக எந்தவித தயக்கமுமின்றி வெளிமாநிலத்தவர்கள் சர்வ சாதாரணமாக வாகனங்களில் புதுவைக்கு வந்து செல்கின்றனர்.

இதேபோல் முள்ளோடை, மதகடிப்பட்டு ஆகிய எல்லைகளிலும் முன்பிருந்த கெடுபிடிகள் இல்லை. இதனால் புதுவையில் மேலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகும் நிலை இருந்து வருகிறது. வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்ளே நுழைவதை தடுக்க எல்லைகளில் மீண்டும் கெடுபிடிகளை கடுமையாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

Next Story