கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்ல வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை அமைச்சர் பேட்டி


கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்ல வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 23 Jun 2020 10:36 AM IST (Updated: 23 Jun 2020 10:36 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்ல வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சிவகாசி,

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விஸ்வநத்தம் பஞ்சாயத்து பகுதியில் உள்ள விஜயலட்சுமிகாலனி, சிவகாமிபுரம் காலனி, முனீஸ்வரன் காலனி, முருகன்காலனி, பாரைப்பட்டி ஆகிய பகுதியில் உள்ள 15 ஆயிரம் குடியிருப்புகளுக்கு போதிய குடிநீர் இல்லாமல் கடந்த 20 ஆண்டுகளாக மிகவும் அவதி அடைந்து வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் தங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் முயற்சியால் மானூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்தநிலையில் விஸ்வநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இதற்காக 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டி மற்றும் உந்துநிலையம் ஆகியவை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது. ரூ.20 லட்சம் செலவில் செய்யப்படும் இந்த பணியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கண்ணன், திட்ட இயக்குனர் சுரேஷ், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், உதவி இயக்குனர்(ஊராட்சி) விஷ்ணுபரன், மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் பலராமன், பஞ்சாயத்து தலைவர் நாகராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆரோக்கியராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலாளர் செல்வம் செய்திருந்தார்.

அமைச்சர் பேட்டி

பின்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி-சாட்சியாபுரம், திருத்தங்கல், இருக்கன்குடி ஆகிய ரெயில்வே பாலங்களுக்கான பணிகளை தொடங்க வலியுறுத்தி முதல்-அமைச்சரை சந்தித்து பேசினேன். இதை தொடர்ந்து முதல்-அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேசி உள்ளார். இன்னும் 2 மாதங்களில் சிவகாசி-சாட்சியாபுரம் ரெயில்வே பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படும். கொரோனா பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்ல வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. தமிழ்நாடு முழு பாதுகாப்புடன் இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் கொரோனா நோய் இருந்து இருந்தால் யாரும் வெளியே தலைக்காட்ட முடியாமல் போய் இருக்கும்.

தற்போது முதல்-அமைச்சரின் கடுமையான முயற்சியாலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களின் தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று பெரும் அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடி

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த நாட்டு மக்களை காக்க தினமும் ஒரு நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் மு.க.ஸ்டாலின் அதை கிண்டல் செய்கிறார். தற்போது உள்ள நிதி நெருக்கடியில் கூட மக்களை பற்றி சிந்திக்க கூடியவர் தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது திருத்தங்கல் நகர அ.தி.மு.க. செயலாளர் பொன்சக்திவேல் உடன் இருந்தார்.

Next Story