கொரோனா தொற்று பாதிப்பு: நெல்லையில் 26 தெருக்களுக்கு ‘சீல்’ வைப்பு


கொரோனா தொற்று பாதிப்பு: நெல்லையில் 26 தெருக்களுக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 23 Jun 2020 9:30 PM GMT (Updated: 23 Jun 2020 4:55 PM GMT)

கொரோனா தொற்று பாதிப்பையொட்டி நெல்லை மாநகர பகுதியில் 26 தெருக்களுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது.

நெல்லை, 

நெல்லை மாநகர பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளுக்கு மட்டும் ‘சீல்‘ வைக்கப்பட்டது. அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா நோயாளிகள் வசித்து வந்த தெருக்களுக்கும் ‘சீல்‘ வைக்கப்பட்டு உள்ளது. அந்த தெருக்களில் மாநகராட்சி சார்பில் கம்பு மற்றும் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுள்ள பகுதி என்றும் நோட்டீசு ஒட்டப்பட்டு உள்ளது.

26 தெருக்களுக்கு ‘சீல்’ வைப்பு

இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்புள்ள 26 தெருக்களுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டு உள்ளது. நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகர், முகமது அலி தெரு, சுந்தர் தெரு, மாதா தெரு, நெல்லை மீனாட்சிபுரம் பெருமாள் சன்னதி தெரு, மேலப்பாளையம் ஆமீன்புரத்தில் 3 தெருக்கள், பாளையங்கோட்டை ரகுமத்நகர், பேட்டை பகுதியில் உள்ள புளியங்குடி தெரு, அழக்கப்பபுரம், சர்தார் தெரு உள்ளிட்ட 26 தெருக்களுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டு உள்ளன.

அந்த பகுதியில் வெளி நபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. முக்கிய தெருக்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேற்கண்ட தெருக்களில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கிருமி நாசினி கூடுதலாக தெளிக்கப்பட்டு வருகிறது. நவீன எந்திரம், பேட்டரி கார்கள் மூலமும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு மாநகராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. அந்த வீடுகளுக்கு மாநகராட்சி சார்பில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான நோட்டீசு ஒட்டப்பட்டு உள்ளது.

Next Story