சேறும், சகதியுமாக காணப்படும் திருமழிசை காய்கறி சந்தை - வாகனங்கள் வந்து செல்வதில் கடும் சிரமம்
சேறும், சகதியுமாக காணப்படும் திருமழிசை காய்கறி சந்தை, இதனால் வாகனங்கள் வந்து செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகின்றன.
சென்னை,
சென்னையை அடுத்த திருமழிசையில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் திருமழிசை காய்கறி சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சந்தை வளாகம் முழுவதும் மழைநீர் குளம்போல தேங்கி கிடக்கிறது. சேறும், சகதியுமாக திருமழிசை சந்தையே அலங்கோலமாக காட்சி தருகிறது.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவு சந்தைக்கு வந்த பல வாகனங்கள் சேற்றில் சிக்கியது. பின்னர் ஜே.சி.பி. எந்திரங்கள் கொண்டு அந்த வாகனங்கள் சேற்றில் இருந்து மீட்கப்பட்டன. எத்தனையோ முறை சொல்லியும் காய்கறி சந்தையில் சாலை அமைத்துதர சி.எம்.டி.ஏ. நிர்வாகம் மறுப்பாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘எல்லாவித வசதியும் செய்து தருகிறோம் என்ற வாக்குறுதியை நம்பித்தான் காய்கறி கடைகள் அமைத்தோம். ஆனால் எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. எத்தனை தடவை வேண்டுகோள் விடுத்தாலும் அதிகாரிகள் பாராமுகமாகவே இருக்கிறார்கள். ஏன் கடை விரித்தோம்? என்று எண்ண தோன்றுகிறது. சேற்றில் காய்கறி கழிவுகளும் சேருவதால் சாக்கடைக்கு நடுவே கடைகள் விரித்தது போல அருவறுப்பாக இருக்கிறது’, என்றனர்.
Related Tags :
Next Story